டெல்லி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்வு

புதுடெல்லி:

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடடத்தில் நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்று வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர்.

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்தனர். இந்த கட்டிடத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் அலுவலகமும், ரௌட்டர் (கணினி வன்பொருள்) தயாரிக்கும் அலுவலகமும் இருந்தன.

இந்த தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து தப்பினர்.

இந்த நிலையில் இன்று மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் தீ விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்களில் 25 பேரின் உடல்களை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த நிலையில் தீ விபத்துக்கு பிறகு 3 மாடி கட்டிடத்தில் இருந்த 19 பேரை காணவில்லை எனறு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீயில் கருகி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காணாமல் போனவர்கள் அங்கிருந்து தப்பி குதித்து சென்றார்களா, அவர்களது நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தீ விபத்து நடந்த கட்டிடத்தில் உள்ள 2 கம்பெனியின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மரணம் விளைவிக்கும் வகையில் குற்றத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மனிஷ் லகரா தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

டெல்லியில் நடந்த மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு அனஜ்மண்டி பகுதியில் நடந்த தீ விபத்தில் 43 பேர் பலியாகி இருந்தனர்.

தீ விபத்து நடந்த கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை பார்வையிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.