முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள்; வனத்துறை தீவிர ஆய்வு; பின்னணி என்ன?

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பும் வெகுவாகக் குறைந்து வருகிறது. வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள செயற்கை குட்டைகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறிவரும் நிலையில், வனப்பகுதியில் நிலவும் அதீதமான வறட்சியின் காரணமாகவே யானைகள் இறந்து வருவதாகக் கூறுகின்றனர்.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை

இது குறித்து விளக்கம் அளித்துள்ள முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், “முதுமலை, சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை நேற்று முன்தினம் ரோந்து சென்ற பணியாளர்கள் பார்த்துள்ளனர்.

அதேபோல் நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 25 – ம் தேதி உயிரிழந்துள்ளது. தெப்பகாடு வனச்சரகத்திற்குட்பட்ட மாயார் நீர் அருவி பகுதியில் 4 வயது ஆண் யானை குட்டி ஒன்றும் உயிரிழந்துள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. சீகூர், ஆனைக்கட்டி ஆறுகள் வறண்டுள்ளன. யானைகளின் இறப்புக்கு வறட்சி காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வன விலங்குகளின் தாகம் தீர்க்க மாற்று வழிமுறைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.