தேசிய அரசியலில் தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: பஞ்சாப் விவசாயிகளுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி: 
தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மத்தியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க் கட்சிகளின்கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். 
இதன் ஒரு பகுதியாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதயுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராவ், தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.  
அங்குள்ள டெல்லி அரசு பள்ளி ஒன்றை பார்வையிட்டார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.  
இந்நிலையில் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய பஞ்சாப் விவசாயிகளை இன்று சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளார். அவருடன் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் ஆம்ஆத்மி முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரும் சண்டிகருக்கு சென்று விவசாயிகளை சந்திக்கின்றனர். 
அப்போது விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயை சந்திரசேகரராவ் இழப்பீடு வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வரும் 26-ந் தேதி பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும் அதன்பிறகு மகாராஷ்டிராவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவையும் சந்திரசேகரராவ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, சீனாவுடனான மோதலின் போது கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சந்திக்க சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். 
இதற்காக அடுத்த வார இறுதியில் மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதில் சந்திசேகரராவ் இரட்டை நிலை கடைப்பிடிப்பதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 
இது தொடர்பாக பேசிய தெலுங்கானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தசோசுஸ்ரவன், தனது சொந்த மாநிலத்தில் 8000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பிறகும் சந்திரசேகரராவ் கண்ணை மூடிக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டார்.
விவசாயிகள் மீது அவருக்கு அக்கறை இருந்தால்,  மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஏன் முதலில் அவர் ஆதரித்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.