தண்ணீர் வாகனம் மோதி உயிரிழந்த 2 வயது குழந்தை… சிறார்கள் வாகனத்தை இயக்குவதாக மக்கள் புகார்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமாரவேல் (32). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி இந்திரா. இந்தத் தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு வயதில் சோலைராஜ் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், குழந்தை சோலைராஜ் இன்றுகாலை வழக்கம்போல தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தத் தெருவுக்கு வழக்கமாக குடிதண்ணீர் சப்ளை செய்யும் வாகனம் பின்னோக்கி தெருவுக்குள் வந்ததாகச் சொல்லப்படுகிறது. தண்ணீர் வண்டியை வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் பால்பாண்டி (17) என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். பின்னோக்கி வந்த வாகனம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சோலைராஜ் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் குழந்தை சோலைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு வந்த சாத்தூர் டவுன் போலீஸார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்து, தண்ணீர் வாகனத்தை இயக்கிய சிறுவன் பால்பாண்டியைக் கைதுசெய்தனர்.

குழந்தை சோலைராஜ்

விபத்துகுறித்து குழந்தை சோலைராஜ் வீட்டுக்கு அருகே வசிக்கும் அக்கம்பக்கத்தினரிடம் பேசினோம். “சாத்தூர்ல ஏகப்பட்ட தனியார் தண்ணீர் கம்பெனிகள் இருக்கு. அதுலருந்து வண்டிகள் தண்ணீர் நிறைச்சிக்கிட்டு தினசரி காலைல இங்க இருக்குற எல்லா தெருக்களையும் குடிநீரை கட்டணம் அடிப்படையில் மக்களுக்கு சப்ளை பண்ணுவாங்க. ஒரு குடம் தண்ணீர் 7 ரூவாலயிருந்து, 14 ரூவாவரைக்கும் விக்கிறாங்க. முனிசிபால்டி தண்ணியலாம் சமையலுக்குப் பயன்படுத்த முடியாமத்தான் நாங்க, இந்தமாதிரி டிராக்டர்ல கொண்டுவர்ற தண்ணிய வாங்கி பயன்படுத்துறோம்.

காலைல தெருக்குள்ள வரும்போதே தாறுமாறா வண்டிய அப்பிடியும், இப்பிடியும் ஒடிச்சி எடுத்து வரும்போது நமக்கே பயமா இருக்கும். மத்த நிறுவன தண்ணீர் வண்டிக்கு முன்னாடி நாம போயி தண்ணீர் சப்ளை குடுக்கனும்னு அவங்களுக்குள்ள போட்டி நடக்குமோ என்னமோ? அந்தளவுக்கு அவங்ககிட்ட போட்டி மனப்பான்மை தெரியும். வண்டி ஓட்டுறவங்களும் அனுபவம் இல்லாத பசங்களாதான் இருப்பாங்க.

தண்ணீா் சப்ளை வாகனம்
மருத்துவமனை

இன்னைக்கு அந்த குழந்தை மேல தண்ணீர் வண்டிய ஏத்துனவனுக்கு 17 வயசுதான்‌ இருக்கும். இவனெல்லாம் யாரு வேலைக்கு வச்சானு தெரியல. வயசு கம்மியா உள்ளவங்களா வேலைக்கு வைக்கக்கூடாதுனு தண்ணீர் கம்பெனிக்காரங்களுக்கு தெரியுமா… தெரியாதா? இவங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறை கிடையாது. ஆனா, போலீஸூம் அப்படி இருக்கலாமா? ஏன்னா, மெயின்ரோடு வழியாத்தான அத்தனை தண்ணீர் வண்டியும் ஊருக்குள்ளேயும், தெருக்குள்ளேயும் வரணும். அப்போ, அங்க இருக்குற காவல்துறை அதிகாரிகள் இதை கண்டிக்கலாமே, தடுக்கலாமே. அதை செய்யாதபோது, போலீஸ் மேலையும்தான் நாங்க சந்தேகப்பட வேண்டியதாயிருக்கு.

இவங்க இவ்வளவு சுதந்திரமா லைலென்ஸ் இல்லாத சின்னப்பசங்கள வேலைக்கு வைக்கிறதால இப்ப யாருக்கு நஷ்டம்னு பாத்தீங்கள்’ல… சின்னக்குழந்தை உசுரு போச்சு. இரண்டு நாள் டிரைவர்கூட உதவிக்கு வர்ற மாதிரி சின்னப்பசங்க ஒட்டிக்கிட்டு வர்றாங்க. மூணாவது நாள் அந்த சின்னப் பசங்களே வண்டிய ஓட்டுற அளவுக்கு வளர்ந்திடுறாங்க. ரொம்ப அசால்ட்டா எல்லாத்தையும் செய்றாங்க. வேகமும், அஜாக்கிரதையும்தான் இன்னைக்கு நடந்த இந்த விபத்துக்கு காரணம். ஆகவே, சம்பந்தப்பட்டவங்க மேல கடுமையா நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.