சென்னையில் அதிகரிக்கும் சட்டவிரோத மது விற்பனை! ஒரே இரவில் 41 பேர் கைது…

சென்னை: சென்னையில் நேற்று ஒரேஇரவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், கடை திறக்கப்படும் நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் மது விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. அரசு மது விற்பனைக்கு  விடுமுறை அளிக்கும் நாட்கள் உள்பட 24மணி நேரமும் பல இடங்களில் மதுவிற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற விற்பனையில், டாஸ்மாக் கடை ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பல பெட்டிக்கடைகளிலும், மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து,  சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய காவல்ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும், காவல் உதவ ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்ட பிறகு, சென்னையில் நடத்திய வேட்டையில்,  இன்று காலை வரை சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக, 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 581 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.11,490 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகரா ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.