ரயில்வே திணைக்களத்திற்கு 2 கோடி ரூபா இழப்பு

புகையிரத பயணச்சீட்டுக் கட்டண அதிகரிப்பு பிரச்சினைக்குரியது என குற்றம் சுமத்தி, புகையிரத நிலைய அதிகாரிகள் நேற்று முன்தினம் (23) மாலை ஆறு மணி முதல் ஆரம்பித்த வேலை நிறுத்த நடவடிக்கை நேற்று (24) பிற்பகல் இரண்டு மணியுடன் நிறைவடைந்தது.

இந்த காலக்கட்டத்தில் பயணச்சீட்டு வழங்கப்படாமல், 80க்கும் மேற்பட்ட ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இலவசமாக பயணம் செய்ததால், ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தை விட 50 சதவீதம் குறைவாக, அதிகரிக்கப்பட்டதுடன் குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரயில் கட்டண உயர்வு பிரச்னைக்குரியது என்பதாலும், இந்த கட்டண உயர்வு 3 மொழிகளிலும் அறிவிக்கப்படாததாலும் ரயில் நிலைய அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

புகையிரத பொது முகாமையாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், புகையிரத வர்த்தக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நேற்று (24) பிற்பகல் இவர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது பிரச்னைக்குரிய திருத்தம் சரி செய்து, ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன், மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்று (25) முதல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டண திருத்தத்திற்கு அமைய புகையிரத பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் என்று புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.