மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற ஹைலைட்ஸ்

நாடாளுமன்றத்தில் போராட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் காட்டியதால் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரௌபதி முர்மு, பல ஆண்டுகளாக வளர்ச்சியில்லாமல் இருந்த ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் – தன்னைத் தங்களின் பிரதிபலிப்பாகப் பார்ப்பது திருப்தி அளிக்கிறது என்றார். “எனது நியமனத்திற்கு பின்னால் ஏழைகளின் ஆசீர்வாதம் உள்ளது. இது கோடிக்கணக்கான பெண்களின் கனவுகள் மற்றும் திறன்களின் பிரதிபலிப்பு.

குடியரசுத் தலைவர் பதவியை அடைவது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை. இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமல்லாமல் அந்த கனவுகளையும் நிறைவேற்ற முடியும் என்பதற்கு எனது நியமனம் ஒரு சான்று.

சுதந்திர இந்தியாவில் பிறந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் நான்தான். சுதந்திர இந்தியாவின் குடிமக்களிடம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய நமது முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று ” என்று திரௌபதி முர்மு மேலும் கூறினார்.

தீவிரமான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்குவது வழக்கமானதாக மாறக்கூடாது: காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி

நாடாளுமன்றம் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதற்கு மத்தியில், காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஒரு சட்டபூர்வமான தந்திரம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். நாடாளுமன்றத்தை முடக்குவது ஒரு தீவிரமான சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது வழக்கமானதாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இருப்பினும், அவையை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், 2004-14 காலகட்டத்தில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாடாளுமன்றத்தை முடக்கியதால், அடிக்கடி ஒத்திவைக்கப்படும். இப்போது காங்கிரஸ் மீது பழி சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது மற்றும் சந்தர்ப்பவாதம் என்று மணீஷ் திவாரி கூறினார்.

சபை முடக்கப்படுவதைத் தடுக்க விவாதம் நடத்த வேண்டும்- ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்வு குறித்து உடனடி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், அரசு விவாதத்திற்கு தயார் என்று கூறி வந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்ட பின்னரே விவாதம் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, விவாதங்கள் மூலம் ஒரு நடுநிலையான வழி அல்லது மாற்று தீர்வைக் காணலாம் என்று கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் ஜனநாயகத்தில் உரையாடல் மற்றும் விவாதங்களின் முக்கியத்துவம் பற்றி பேசுகிறார் என்று வாதிட்டார்.

விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து அவசரமாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் போராடி வருகின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வாரமே சலசலப்பில் முடிவடைந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் இன்று வலியுறுத்தியுள்ளது.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்பு திருத்த மசோதா 2022 – ராஜ்ய சபாவில் நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்றத்தின் அலுவல் திட்டப்படி, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்பாடுகளைத் தடை செய்தல்) திருத்த மசோதா, 2022 பரிசீலனை மற்றும் நிறைவேற்றுவதற்காக ராஜ்யசபா எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லோக்சபாவில், குடும்ப நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா, 2022 பரிசீலனை மற்றும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுவதற்காக ஒத்திவைப்பு

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடுவதற்காக ஒத்திவைக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ்

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். முன் தேதியிட்டு பாக்கெட் செய்யபட்ட உணவு தானியங்கள், தயிர், மோர் பால் போன்றவற்றின் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர்.

இதற்கிடையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பிக்கள் டெரெக் ஓ பிரையன் மற்றும் டாக்டர் சாந்தனு சென் ஆகியோர் விதி 267 இன் கீழ் ‘அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவை’ குறித்து அறிவித்தனர்.

பிரச்சனைகளை விவாதிக்க அரசு தயாராக உள்ளது என லோக்சபா சபாநாயகர் கூறியதற்கு உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி, பதாகைகளை ஏந்தியபடி எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் அமைதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார்.

“எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” என்று அவர் கூறினார். மேலும், அவையில் போராட்ட முழக்க அட்டைகளை கொண்டு வருபவர்கள் விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சபாநாயாகர் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை எச்சரித்தார்.

இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் போராட்டம் நடத்தியதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் 45 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சிகள் திட்டமிடப்பட்ட அலுவல்களை நிறுத்தி, பணவீக்கம் குறித்த விவாதத்தை நடத்த வலியுறுத்தின. இருப்பினும், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கூறுகையில், கோவிட்-க்கு பிந்தைய சிக்கல்கள் அதிகரித்து வருவதால் ஏற்படும் சூழ்நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபை எடுத்துக்கொள்ளும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால், அவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்க துணைத் தலைவரை கட்டாயப்படுத்தினர்.

திரௌபதி முர்முவின் பதவிப்பிரமாணத்தின் போது கார்கே அமர வைக்கப்பட்ட இருக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபா தலைவருக்கு கடிதம்

இன்று நடந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அமர வைக்கப்பட்ட இருக்கை அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ற ஏற்றதாக இல்லை என்று எதிர்க்கட்சிகள், ராஜ்யசபா தலைவருக்கு கடிதம் எழுதின.

எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்சனைகளை விவாதிக்க அரசு தயார்; சபை செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் – மக்களவை சபாநாயகர்

நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறிய மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் திங்கள்கிழமை பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்ததால் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எம்.பி.க்கள் அவையின் மத்தியில் வந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பின்னர் மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

விதிகளை மீறிய நடத்தை காரணமாக 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் லோக்சபா கூட்டத்தொடரில் இடைநீக்கம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், டி.என்.பிரதாபன், ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் சபையின் விதிமுறைகளை மீறிய நடத்தை மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என். பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையில் முதன்முதலில் பிளக்ஸ் கார்டுகளைக் காட்டியதற்காக தலைமையகத்தில் இருந்த ராஜேந்திர அகர்வால் 374 விதியின் கீழ் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது குறித்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

எம்.பி.க்கள் – மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் மற்றும் எஸ்.ஜோதிமணி ஆகியோர் சபையில் பிளக்ஸ் பேனர்களை காட்டியதற்காக 374 விதியின் கீழ் ராஜேஷ் அகர்வால் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். இதையடுத்து, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஒரு அறிவிப்பை வாசித்தார். இந்த கூட்டத்தொடர் முழுவதும் 4 எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்ய கோரினார்.

“சபாநாயகர், இந்த நடவடிக்கை அவசியம் என்று கருதினால், தலைவரின் அதிகாரத்தை புறக்கணிக்கும் அல்லது சபையின் விதிகளை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு உறுப்பினரின் பெயரை சபாநாயகர் குறிப்பிடலாம்.” என்று 374வது விதி கூறுகிறது.

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை ராஜ்யசபாவும், லோக்சபாவும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.