பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

புதுடெல்லி: ‘விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது,’ என ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஒன்றிய பாஜ அரசு தனது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து தவறாக பயன்படுத்துவதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். சட்டம் என்பது எல்லோருக்கும் சமம். அச்சமோ, தயவோ இன்றி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  ஆனால், தற்போது அது தன்னிச்சையாக, குறிப்பிட்ட, நியாயப்படுத்த முடியாத பல எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையின் ஒரே நோக்கம், நற்பெயரை தகர்ப்பதும், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாஜ.வை எதிர்த்து போராடும் சக்திகளை பலவீனப்படுத்துவதுதான். மேலும், அத்தியவாசி பொருட்கள் விலை அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம், அதிகரித்து வரும் உயிர், சுதந்திரம் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பின்மை போன்ற அன்றாட கவலைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி குறித்து விவாதம் நடத்த அனுமதிக்காத அரசின் பிடிவாத அணுகுமுறை குறித்தும் எதிர்க்கட்சிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன. முர்முவுடன் மோடி சந்திப்புநாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், ராஷ்டிரபதி பவனில் உள்ள தனது அலுவலகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா படேல் மற்றும் ஒடிசா ஆளுநர் கணேஷி லால், சட்டீஸ்கர் ஆளுநர் அனுசுயா உய்கி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல்வேறு மாநில ஆளுநர்கள் ஜனாதிபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.