6 வயது சிறுமி சர்ச்சில் பலாத்காரம்; 12 ஆண்டுகளுக்கு பின் வழக்கு:இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

6 வயது சிறுமி சர்ச்சில் பலாத்காரம் 12 ஆண்டுகளுக்கு பின் வழக்கு

பெங்களூரு
: பெங்களூரில், 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவர், இதை மூடி
மறைக்க முயற்சித்த ஆறு பேர் என எட்டு பேர் மீது, 12 ஆண்டுகள் கழித்து
இளம்பெண் அளித்த புகாரால், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு
வித்யாரண்யபுராவின் தொட்டபெட்டஹள்ளி அருகில் காவேரி லே – அவுட்டில்
கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. தேவாலயம் அருகில் வசித்து வந்த தம்பதி, பணிக்கு
செல்வதற்கு முன், தங்கள் 6 வயது மகளை, தேவாலயத்தில் சைமன் பீட்டர்
என்பவரிடம் விட்டு செல்வர். பணி முடிந்து, மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்து
செல்வர். இதை தனக்கு சாதமாக்கி கொண்ட சைமன் பீட்டர், சிறுமிக்கு ஆபாச
படங்களை காட்டி, பலாத்காரம் செய்துஉள்ளார்.

சிறுமி 14 வயது ஆகும்
வரை இந்த கொடுமையை, சைமன் பீட்டர் தொடர்ந்துள்ளார். இது குறித்து வெளியே
கூறக்கூடாது என சிறுமியை மிரட்டியதால், இதை பெற்றோரிடம் கூறவில்லை.இதனால்
வேதனையில் இருந்த சிறுமி, அதே தேவாலயத்தில் இருந்த சாமுவேல் டிசோசா
என்பவரிடம் தெரிவித்தார். அவரும் இதை தனக்கு சாதகமாக்கி, அச்சிறுமியை
மிரட்டி, இரண்டு ஆண்டுகள் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.இதையறிந்த
சிறுமியின் பெற்றோர், சாமுவேல் டிசோசாவை எச்சரித்தனர்.

இதனால்,
மன அழுத்தத்தில் இருந்த சிறுமிக்கு ஆலோசனையும், சிகிச்சையும்
அளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், தற்போது பூரண குணமடைந்து, 18 வயது
நிரம்பிய அப்பெண், போலீசில் புகார் தெரிவித்தார். அதில், தனக்கு பாலியல்
பலாத்காரம் செய்த இருவரையும், இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சித்த ஆறு
பேர் குறித்தும் தெரிவித்தார்.

இதையடுத்து, பலாத்காரம் செய்த
இருவர் மீது ‘போக்சோ’ வழக்கும்; இச்சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்ததாக,
ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி

வானுார் : கிளியனுார் அருகே வயிற்று வலியால் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிளியனுார் அடுத்த வி.கேணிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள், 45; இவர், சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 19ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், விரக்தியடைந்த காசியம்மாள், எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பா.ஜ., பிரமுகர் படுகொலை; கர்நாடகாவில் பதற்றம்

தட்சிண கன்னடா : கர்நாடகாவில் பா.ஜ., பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தட்சிண கன்னடா மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது. தட்சிண கன்னடாவைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு, 30. பா.ஜ., வில் மாவட்ட இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் தன் இறைச்சி கடையை நேற்று முன்தினம் இரவு அடைத்த சமயத்தில் முகமூடி அணிந்த மூவர் தலை, கழுத்தில் வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

latest tamil news


படுகாயம் அடைந்த பிரவீனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, பா.ஜ.,வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இதனால் தட்சிண கன்னடா மாவட்டம் முழுதும் பதற்றம் பரவியது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல இடங்களில், பஸ்கள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது.பெல்லாரே பகுதியில் 21ம் தேதி மசூத், 18 என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

20 கிலோ கஞ்சா கடத்தியோர் கைது

தாம்பரம் : ஆந்திராவில் இருந்து, கஞ்சா கடத்தி வந்து, தாம்பரத்தில் விற்பனை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.மேற்கு தாம்பரம், சிவானந்தம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக, தாம்பரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அங்கிருந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் வண்டலுாரைச் சேர்ந்த விக்னேஷ், 29, மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த வினோத், 24, என்பது தெரிய வந்தது. இருவரும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து, ரயில் வாயிலாக கஞ்சாவை கடத்தி வந்து, இங்கு விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு இருவர் சிறையில் அடைப்பு

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.பெருமாநல்லுார் எஸ்.எஸ்., நகரை சேர்ந்தவர் சண்முகம்; இவரது மகன் நவீன் குமார், 31. குன்னத்துார் ரோட்டில் தள்ளு வண்டியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு நேற்று முன்தினம் பைக்கில் சாப்பிட வந்த இரு வாலிபர்கள் நவீன் குமார் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.

நவீன் குமார், பெருமாநல்லுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த ஜெபராஜ், மகன் சாலமோன் அடைக்கலராஜ், 33, திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் வெற்றி, 24, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, தங்க நகை மற்றும் செயின் பறிக்க பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பின், ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்த இருவரையும், சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதனால், இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

7 பேர் மீது ‘குண்டாஸ்’ பாய்ந்தது! கொலை வழக்கில் கைதானவர்கள்

பல்லடம் : பல்லடம் அருகே நடந்த கொலை வழக்கில் கைதான பெண் உட்பட ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.பல்லடம் அருகே அருள்புரம் செந்துாரன் காலனியை சேர்ந்த கோபாலன், 38; மனைவி சுசீலா, 34. கோபாலன் சின்னக்கரையிலும், சுசீலா, அருள்புரத்திலும் உள்ள பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தனர்.

latest tamil news

கடந்த, மே 4ம் தேதி அன்று மாலை, சுசீலாவின் கணவர் கோபாலன் சின்னக்கரை அருகே கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சுசீலாவுடனான கள்ளத்தொடர்பு காரணமாக, கூலிப்படையை வைத்து, கள்ளக்காதலன் மாரீஸ், 26, கோபாலனை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, மாரீஸ், 26, கொலைக்கு உடந்தையாக இருந்த கூலிப்படையை சேர்ந்த மதன்குமார், 21, மணிகண்டன், 24, வினோத், 28, லோகேஸ்வரன், 20, விஜய், 25 மற்றும் சுசீலா, 35 ஆகியேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, கலெக்டர் உத்தரவின் பேரில், இவர்கள் ஏழு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி; வணிக வரி துறை அதிகாரியின் ஓட்டுனர் கைது

பாண்டி பஜார் : ‘வணிக வரித் துறை அதிகாரி’ எனக் கூறி, தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொளத்துார் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் நேரு, 48. தொழில் அதிபரான இவர், விவசாயிகளிடமிருந்து மொத்தமாக விவசாய பொருட்களை பெற்று, விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.சந்தேகம்இவரது மொபைல் போனுக்கு மர்ம நபர் ஒருவர் அண்மையில் பேசி உள்ளார்.

latest tamil news

தான் வணிகவரித்துறை அமலாக்கப்பிரிவு அதிகாரி என, அறிமுகம் செய்துள்ளார்.பின், நீங்கள் அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளீர்; உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க உள்ளோம். அதை தடுக்க 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.சில நாட்களாக தொடர்ந்த பேச்சுக்கு பின், 10 லட்சம் ரூபாய் கொடுக்க நேரு ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து பணத்தை தி.நகர், பனகல் பூங்கா அருகே எடுத்து வரும்படி அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார்.அதன்படி, நேற்று முன்தினம் நேரு மற்றும் அவரது நண்பர்கள் பணத்துடன் அங்கு சென்றார். அங்கு வந்த, பணம் கேட்டு மிரட்டிய நபரை கண்டதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சட்ட விரோத செயல்இதையடுத்து, அவரிடம் வணிகவரித்துறை அதிகாரிக்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது, அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, நேரு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அந்த நபரை மடக்கி பிடித்து பாண்டிபஜார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்ட நபர், தி.நகர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேலு, 44, என்பதும், வணிக வரித்துறையில் துணை கமிஷனரின் ஓட்டுனராக பணிபுரிவதும் தெரியவந்தது. பாண்டி பஜார் போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும், நேரு 10 லட்சம் ரூபாய் கொடுக்க ஒப்புக் கொண்டது எதற்காக; அவர் ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்கள் மீது சரமாரி தாக்குதல்

பூந்தமல்லி : பூந்தமல்லியில், மாடு காணவில்லை என புகார் அளித்த மூதாட்டி மற்றும் அவரது மகளை தாக்கிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியை சேர்ந்தவர் இந்திராணி, 80; மாடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகளில் ஒன்று, 12ம் தேதி காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து, இந்திராணியும், அவரது மகள் ரேணுகாவும் சேர்ந்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது, வீட்டின் அருகேயுள்ள ரமேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக, இந்திராணி கூறியுள்ளார்.இந்த நிலையில், தன் மீதான புகாரை திரும்ப பெறக்கூறியும், கேட்காததால், ஆத்திரமடைந்த ரமேஷ், நேற்று முன்தினம், இந்திராணி மற்றும் அவரது மகள் ரேணுகாவை, வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

இந்த காட்சி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கிடையில், தாக்குதலில் காயமடைந்த இந்திராணி மற்றும் அவரது மகள், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.