​தேனி: திமுக உட்கட்சிப் பூசல்; வீடு புகுந்து ஒன்றியச் செயலாளர்மீது தாக்குதல்! – நடந்தது என்ன?

​தி.மு.க தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள தேனி தெற்கு ஒன்றியச் செயலாளராகப் பதவி வகிப்பவர் ரத்தினசபாபதி​ (62)​. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது சிலர் வீடு புகுந்து இவர்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.‌ கம்பி, உருட்டுக்கட்டை, நாற்காலி ஆகியவற்றைக் கொண்டு சுமார் ஐந்துக்கும் மேற்பட்டோர் தாக்கியதில் ரத்தினசபாபதியின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.​ ​அருகே இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி​த்தனர்.

வீடு புகுந்து தாக்குதல்

​அண்மையில் நடந்து முடிந்த தி.மு.க உட்கட்சித் தேர்தலில் வீரபாண்டி பேரூர் செயலாளராகப் பதவி வகித்துவந்த… வீரபாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தகுமாருக்குக் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. வீரபாண்டியை​ச்​ சேர்ந்த செல்வராஜ் என்பவர் பேரூர் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கட்சியில் தனக்குப் பதவி கிடைக்காத விரக்தியிலிருந்த சாந்தகுமாரின் தூண்டுதலாலே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக​க் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி

​இது தொடர்பாக வீரபாண்டி ​போலீஸார், மகேந்திரன், போலீஸாக உள்ள அவர் மனைவி கவிதா, ராஜேஸ், பிரபாகரன், வினோத், தீனா, சாந்தகுமார் ஆகியோர்மீது வழக்க பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

​ஏ​ற்கெனவே, “தேனி தி.மு.க-வில் ​கட்சியில் பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவி கொடுக்கிறார்கள்… ஏழை எளிய தொண்டர்களுக்கும், உழைத்தவர்களுக்கும் பதவி கிடைக்கவில்லை” என மூத்த கட்சியினரும், “சாதிபார்த்துதான் பதவி கொடுக்கிறார்கள்” எனக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தலைமைக் கழகத்துக்கே சென்று புகார் அளித்திருக்கின்றனர். இதற்கிடையே உட்கட்சித் தேர்தல் காரணமாக ஆசிட் வீசப்பட்டது, தீக்குளிக்க முயன்றது, விருப்பமனு தாக்கல்செய்ய வந்தவரை தாக்கியது எனத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்தது வந்தன.

இந்த நிலையில் தற்போது பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அதற்கு ஒன்றியச் செயலாளர்தான் காரணம் எனக்கூறி அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் தேனி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.