உக்ரைன் மற்றும் சீன மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த இந்திய மாணவர்கள் எப்எம்ஜி தேர்வு எழுத அனுமதி

புதுடெல்லி: ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் கரோனா காரணமாக உக்ரைன், சீனாவில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்யும் திட்டத்தை 2 மாதத்துக்குள் தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த இந்திய மாணவர்கள், 2022 ஜூன் 30-ம் தேதியும் மற்றும் அதற்கு முன்பும் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வை (எப்எம்ஜிஇ) எழுத அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவமனை களப் பயிற்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இங்குள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டு காலத்துக்கு கட்டாய பயிற்சியில் ஈடுபட வேண்டும். இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் மருத்துவ நடைமுறைகளை அறிந்து கொள்ள இந்த பயிற்சி அவசியம். மற்ற மாணவர்கள் ஓராண்டு காலத்துக்கு இந்த பயிற்சியை தொடரலாம்.

தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள், 2 ஆண்டு காலத்துக்கு மருத்துவமனை களப் பயிற்சியை நிறைவு செய்த பிறகே தங்களை மருத்துவராக பதிவு செய்து கொள்ள முடியும். வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு இந்த தளர்வு இந்த ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். எதிர்காலத்தில் இதை முன்மாதிரியாக கருதக் கூடாது. இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.

உக்ரைனில் இந்திய மாணவர்கள் 20,672 பேர் மருத்துவம் படிக்கின்றனர். போர் காரணமாக நாடு திரும்பிய இவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றனர். தற்போது உக்ரைனில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், வகுப்புகளை தொடங்க உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.