இலவசத் திட்டங்களுக்கு என்னதான் தீர்வு?

இலவசத் திட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மத்திய அரசின் சார்பில் ஆஜராகி பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இலவசத் திட்டங்களை முறைப்படுத்தவில்லை எனில், நாடு பொருளாதாரச் சீரழிவை சந்திக்கும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த நிபுணர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்.

அரசாங்கங்கள் தங்கள் நிதிநிலையைக் கணக்கில் கொள்ளாமல், சகட்டுமேனிக்கு இலவசத் திட்டங்களை அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; இலவசத் திட்டங்கள் மக்களிடம் உழைக்கும் எண்ணத்தை மழுங்கடித்து, அவர்களை சோம்பேறிகள் ஆக்கிவிடுகின்றன என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், இலவசத் திட்டங்களை அறிவிப்பதை எந்த அரசியல் கட்சி முதலில் நிறுத்தப்போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலவசத் திட்டங்கள் என்றாலே அது மாநிலக் கட்சிகள் கண்டுபிடித்த எலெக்‌ஷன் ஏமாற்று என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தேசியக் கட்சிகளின் செயல்பாடு, மாநிலக் கட்சிகளுக்குக் கொஞ்சம்கூட குறைந்தாக இல்லை. இந்த ஆண்டு நடந்த உ.பி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும், காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு இலவசத் திட்டங்களை அறிவித்தது ஊருக்கே தெரிந்த உண்மை. அந்த மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் நடக்கும் தேர்தலில் இந்த மாதிரியான அறிவிப்புகளை தேசியக் கட்சிகள் வெளியிடத்தான் செய்கின்றன.

ஆக இந்த விஷயத்தில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று பிரித்துப் பார்க்காமல், அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குதான் இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கறாரான விதிமுறைகளைத் தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும். உதாரணமாக, அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்காமல், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே 10 கிலோ அரிசி இலவசம் என்று தெளிவாக அறிவிக்க புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து, அதை அனைத்து அரசியல் கட்சிகளும் அவசியம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தலாம்.

இலவசங்களைப் பெறத் தகுதியானவர்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் சரியாகக் கண்டறிய வேண்டும். இன்றைக்குப் பல லட்சம் சம்பாதிப்பவர்களும் ரேஷன் கடையில் அரிசி வாங்குவது உட்பட அனைத்து சலுகைகளையும் பெறு கிறார்கள். இப்படி நடந்தால்தான் நம்மால் கொள்ளை அடிக்க முடியும் என்பது தெரிந்தே அரசியல்வாதிகள் அதை மாற்றாமல் இருக்கிறார்கள். ஆக, அனைத்து அரசியல்வாதிகளும் மனம் திருந்தினால் தவிர, இந்தப் பிரச்னைக்குத் தீர்வில்லை.

இப்படிப்பட்ட திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளை ஆதரிக்கக் கூடாது என்கிற சிந்தனை மக்களிடமும் உருவாக வேண்டும். இந்த விஷயத்தில் மக்கள் உறுதியான முடிவெடுக்கவில்லை எனில், காலகாலத்துக்கும் நம்மைக் கடன்காரர்களாகவே அரசியல் கட்சிகள் வைத்திருக்கும்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.