'நோ' சொன்ன பீகார் முதல்வர் நிதிஷ் குமார் – பிரதமர் மோடியை புறக்கணிக்கிறார்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிடி ஆயோக் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார்.

பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே, முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

அக்னிபத் திட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில், பாஜகவுடன், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இப்படி பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி திங்கட்கிழமை தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிடிஆயோக் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பீகார் மாநில துணை முதலமைச்சர் கலந்து கொள்வார் என, முதலமைச்சர் நிதிஷ் குமார் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரிகள், இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 8 ஆம் தேதி நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அதே நாளில், தனது தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில வளர்ச்சி தரவரிசையில் பீகார் மாநிலத்தை கடைசி இடத்தில் வைத்திருக்கும் நிடி ஆயோக் அமைப்பு மீது, நீண்ட காலமாகவே, நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம், கொரோனா தொற்றை காரணம் காட்டி, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த விருந்தில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கும் செல்லாமல், துணை முதலமைச்சரை நிதிஷ் குமார் அனுப்பி வைத்தார். இப்படி, பாஜகவை முதலமைச்சர் நிதிஷ் குமார் தொடர்ந்து புறக்கணித்து வருவது, பீகார் மற்றும் தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.