டெல்லி வக்கீலை அழைத்து வர அவகாசம் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தள்ளிவைப்பு

Chennai High Court postponed ADMK case as OPS request: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று, அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு (ஆகஸ்ட் 10) தள்ளி வைத்துள்ளது.

ஒற்றைத் தலைமை கோரிக்கை காரணமாக அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என பிரிந்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஒற்றை தலைமை கோரிக்கையால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடைகேட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும் உயர் நீதிமன்றம் பொதுக்குழு நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளித்தது. ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், பொதுக்குழு தீர்மானங்களை நிராகரித்து, ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் இ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: நீர்நிலை பகுதியில் சாஸ்த்ரா பல்கலை.? தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

இதனையடுத்து இந்த பொதுக்குழுவுக்கு தடைக்கேட்டு, ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை அடுத்து பொதுக்குழு நடைபெற்று இடைக்கால பொதுசெயலாளர் ஆனார் இ.பி.எஸ்.

இதற்கிடையில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே மாற்றி, இரு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​வேறு நீதிபதி புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதாக ஒ.பி.எஸ் மற்றும் மற்றொரு மனுதாரரான வைரமுத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு முறை இதுதொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நியமிக்கும் முடிவை தலைமை நீதிபதி எடுக்கும் வகையில், வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

இதற்கிடையில், வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகுவதாக அறிவித்ததையடுத்து, இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணக்குமார் இந்த வழக்கில் ஆஜராக உள்ளதால் வழக்கை நாளை மறுதினம் தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை நாளை மறுதினம் (ஆகஸ்ட் 10) பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.