மதுரை திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனைக்கு ரூ.60 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1975ம் ஆண்டு கீழ்பாக்கத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி துவங்கப்பட்டது. பின்னர் 1982ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் மூன்றறை ஆண்டு டிப்ளமோ வகுப்பு துவங்கப்பட்டது. அதன்பிறகு 1985ம் ஆண்டு டிப்ளமோ வகுப்பு பட்டப்படிப்பாக தரம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் இந்த கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதியில் கல்லூரி இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு மாணவர்கள் ஆய்வகத்தில் படித்துக் வருகின்றனர். மதுரைக்கு வரும்போது கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் தங்களுக்கு கட்டிடத்தை சீரமைத்துதர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன்.

நகராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் கால்வாய் அமைத்து குண்டாற்றுடன் இணைத்துவிட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர். இதனைமீறி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குமா என ஆய்வு செய்வதற்காக கலெக்டர் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இந்த இடத்தில் ஆய்வு நடத்தபட உள்ளது. ஆய்வறிக்கையின்படி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரியவந்தால் அருகில் உள்ள இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்படும்.
இந்த அறிக்கையின்படி, ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில், விருதுநகர், திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.