பிறப்புறுப்பில் நகைகள்… அழகா; ஆபத்தா?|காமத்துக்கு மரியாதை S 3 E 4

உடல் உறுப்புகளில் துளையிட்டு நகை அணிகிற பழக்கம் உலகம் முழுக்க இருக்கிறது. அணிபவர்கள், அதை அழகுக்காக என்று நினைத்தாலும், துளையிடும் இடங்களைப் பொறுத்து ஆரோக்கிய பலன்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

சமீப வருடங்களாகப் பிறப்புறுப்பிலும் துளையிட்டு நகை அணிகிற பழக்கம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. அழகுக்கும் ஃபேஷனுக்கும் ஓகே… ஆனால், உடலின் மிக மென்மையான சருமத்தைக் கொண்ட அந்தப் பகுதிகளில் துளையிடலாமா? மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம்.

பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி

’’நம்முடைய உடல் அவயங்களில் மெல்லிய துளையிட்டு நகை அணிவது காலங்காலமாக இருக்கிற பழக்கம்தான். சிலர் காதுகளில் ஒரு தோடோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலரோ, வரிசையாகத் துளையிட்டு நான்கைந்து தோடுகள் போட்டுக் கொள்வார்கள். அவரவர் காது; அவரவர் விருப்பம்தான்.

ஆணோ, பெண்ணோ `நான் பிறப்புறுப்பில் துளையிட்டு நகை அணிந்து கொள்ளலாமா’ என்றால், அவர்களுக்கும் ’உங்கள் விருப்பம்தான்’ என்பதே என்னுடைய பதில். `என் உடம்பு; என் உறுப்பு; நான் நகை போட்டுக் கொள்கிறேன்’ என்றுகூட சிலர் என்னிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். உண்மைதான். அது உங்கள் உரிமைதான். ஆனால், எது செய்தாலும் அதனால் உங்கள் உடலுக்கு ஏதாவது நன்மை கிடைக்க வேண்டும் அல்லவா? பிறப்புறுப்பில் நகை அணிந்து கொள்வதால், உடலுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்பதற்கான மருத்துவ ஆதாரம் இதுவரை இல்லை.

சரி, பிறப்புறுப்பில் துளையிடுவதாலும், நகை அணிவதாலும் ஏதாவது பக்க விளைவுகள் ஏதும் வருமா என்றால், வாய்ப்புகள் உண்டு என்பதுதான் என்னுடைய பதில். அந்த இடத்தில் துளையிடும்போது நிச்சயம் காயம் ஏற்படும். காயத்தின் ஆறும் தன்மை நபருக்கு நபர் வேறுபடும். துளையிடுகிற உலோகம் சுத்தமாக இல்லையென்றால் காயத்தில் தொற்றும் ஏற்படலாம். துளைத்த காயம் ஆறிய பிறகு அந்த இடத்தில் தழும்புபோல ஏற்பட்டால், அதைப் பார்ப்பதற்கு சம்பந்தப்பட்டவருக்கே பிடிக்காமல் போகலாம். அழகாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஒரு செயல், இருக்கும் அழகையே குலைத்து விடலாம்.

காமத்துக்கு மரியாதை

தவிர, பிறப்புறுப்பில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், இரும்பு என்று எந்த உலோகத்தில் நகை போட்டாலும், அவரவர் சருமத்தின் தன்மை, அந்த உலோகம் தொடர்பான ஒவ்வாமை போன்ற காரணங்களால் சருமத்தில் அலர்ஜியும் ஏற்படலாம்’’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.