லலித் மோடி – சுஷ்மிதா சென் காதல் முடிவுக்கு வந்தது?

புதுடில்லி :’இந்தியன் ப்ரீமியர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் நிறுவனரான லலித் மோடி – பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இடையிலான காதல் முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஐ.பி.எல்., டி – 20 கிரிக்கெட் போட்டிகளை துவங்கி, அதன் முதல் தலைவராக இருந்தவர் லலித் மோடி, 58. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்று குடியேறினார். அங்கு அவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது மனைவி மினால் மோடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2018ல் உயிரிழந்தார். இந்நிலையில், ‘பாலிவுட்’ நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென், 46, உடன் லலித் மோடிக்கு காதல் மலர்ந்தது. தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு இருவரும் ஒன்றாக சென்று விடுமுறையை கழித்த புகைப்படங்களை தன், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் லலித் மோடி கடந்த ஜூலையில் பகிர்ந்து கொண்டார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா முகப்பு புகைப்படமாகவும் வைத்தார். அவரைப் பற்றிய குறிப்பில், சுஷ்மிதாவை தன் காதலி என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், லலித் மோடியின் இன்ஸ்டாகிராம் முகப்பு புகைப்படம் நேற்று மாற்றப்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு, தான் மட்டும் தனியாக உள்ள புகைப்படத்தை வைத்துள்ளார்.

மேலும், தன்னைப் பற்றிய குறிப்பில் இருந்த சுஷ்மிதாவின் பெயரையும் அவர் நீக்கியுள்ளார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக அவரது நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது. ஆனால், இதை லலித் மோடி – சுஷ்மிதா தரப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.