கல்வி , திறன் விருத்தி பயிற்சிகளில் ஒத்துழைப்பினை வலுவாக்க இந்தியா – இலங்கை திடசங்கற்பம்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் (ITEC) அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கை இடையில் காணப்படும் 58 ஆண்டுகால ஆளுமை விருத்தி பங்குடைமையைக் கொண்டாடும் ITEC தினநிகழ்வுகள் 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

2. கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் பிரதம விருந்தினராகவும், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்ஹ, அவர்கள் கௌரவ விருந்தினராகவும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்.  ITEC திட்டத்தின்கீழ் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் பயிற்சி நெறிகளைப் பூர்த்திசெய்த அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள ITEC முன்னாள் மாணவர்கள், உள்ளிட்ட 100க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

3. இங்கு உரை நிகழ்த்தியிருந்த கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள், 2000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக்கொண்டிருக்கும் இந்திய இலங்கை உறவு தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படும் வருடாந்த புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் ITEC திட்டங்களுக்காக இந்தியாவை மெச்சியிருந்த அமைச்சர், கடந்த சில மாதங்களில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி ரீதியான ஆதரவுக்காகவும் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதத்துறை) மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை போன்றவற்றிலிருந்து உயர் கல்வி, ஆளுமை விருத்தி மற்றும் திறன் விருத்தி ஆகிய துறைகளில் இந்தியா இலங்கை இடையிலான மேலதிக ஒத்துழைப்பின் நோக்கம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் பரந்தளவிலான தேசிய கல்விக்கொள்கை தொடர்பாகவும் அதன் மூலமாக மாணவர்களும் கல்வியாளர்களும் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் குறித்தும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

4. இதேவேளை இந்நிகழ்வில் உரைநிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இந்த ITEC திட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக மகத்தான ஆர்வத்தினை வெளிப்படுத்திவருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், ITEC ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு குறிப்பிட்டிருந்த அவர், கல்வி மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகளில் இந்தியா இலங்கை இடையிலான ஒத்துழைப்பிற்கு வானமே எல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஒவ்வொருவருடமும் இலங்கைக்காக வழங்கப்படும் 700 புலமைப்பரிசில்கள் மற்றும் ITEC பயிற்சிநெறிகளுக்கான 402இடங்கள் ஆகியவற்றுக்கு சமாந்தரமாக இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இடையிலான கூட்டாண்மை ஊடாக உயர்கல்வி உள்ளிட்ட கல்வித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா மேற்கொண்டிருக்கும் பெருமுயற்சி குறித்தும் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

5. இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்கள்  இந்தியாவில் ITEC பயிற்சி குறித்த நினைவுகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன் பல்வேறு ITEC திட்டங்களின் முழுமையான உள்ளடக்கத்தைப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISC) ‘விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை’ தொடர்பான ITEC பயிற்சித் திட்டத்தில் இணைந்திருந்த  இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மேலதிக பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் திருமதி இல்மி கங்கா ஹெவாஜூலிகே அவர்கள், ‘அறிவும் அனுபவமும் நிறைந்த முழுமையான பயிற்சிநெறி’ என இந்த திட்டங்களை விவரித்தார். இதேவேளை, கொள்கை வரைவு மற்றும் I-STEM குறித்து பெறப்பட்ட தகவல்கள் மிகவும் பெறுமதியானவை என்றும், இந்திய முறைமையுடன் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக I-STEM போன்ற கருத்திட்டம் ஒன்றை இலங்கை தேசிய விஞ்ஞான மன்றம் ஆரம்பித்திருக்கும் நிலையில் இதன்மூலமான அறிவினை ஏற்கனவே இலங்கையில் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். புதுடில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் அயல்நாடுகளிலுள்ள இளம் தலைவர்களுக்கான பயிற்சிநெறியில் கலந்துகொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் இணைய பாதுகாப்பு மற்றும் இணக்கப்பாட்டு பிரிவின் முகாமையாளர் திரு. ரிஷாத் அக்ரம் ராபி பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், கொள்கை வகுப்பு, சட்டம், அரசியலமைப்பு, சுகாதாரம் மற்றும் திட்டமிடல் போன்ற பல்வேறு துறைகளில் இப்பயிற்சிகளின்போது வழங்கப்பட்டிருந்த விரிவுரைகள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைத்தார்.

நொய்டாவின் ஜெய்ப்பூர் முகாமைத்துவ நிறுவனத்தினால் நடத்தப்பட்ட “புத்தாக்கத்துறைசார் நிறுவனங்களுக்கான வடிவமைப்புச் சிந்தனைக்கான அணுகுமுறை” என்ற ITEC பாடநெறியில் கலந்துகொண்ட சிலாபம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சசிஜா கயேஷினி சில்வா, ITEC பயிற்சியானது தாய்நாட்டிற்காகப் புதிய உத்வேகத்துடன் பணியாற்றத் தன்னைத் தூண்டியதாக தெரிவித்தார். பெங்களூரு சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சம்ஸ்தானாவில் (SVYASA) ITEC பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்வள ஆலோசகர் செல்வி. சதுர்தி உதாரி விதங்கே, அப்பயிற்சியை “வாழ்க்கையை மாற்றும் அனுபவம்” என்று குறிப்பிட்டார். அத்துடன் ஏனையோரும் யோகா மூலம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை காண்பதற்கு இந்த பயிற்சி அனுபவத்தினை பயன்படுத்தி உதவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இத்திட்டங்களின் பயிற்சி மாதிரிகள் நவீன தொழில்நுட்பங்களுடன் ஒத்திசைந்த்தாகவும் சமூகப் பொருத்தப்பாட்டைக்கொண்டிருப்பதாகவும் இத்திட்டங்களில் பங்கேற்றிருந்தவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

6. அபிவிருத்தி அடைந்துவரும் நட்பு நாடுகளின் ஆளுமைவிருத்தியினை மேம்படுத்தவும் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை வழங்குவதற்காகவும் இந்திய அரசின் முன்னோடித்திட்டமான இந்த ITEC நிகழ்ச்சித்திட்டங்கள் 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த திட்டங்களில் பங்கேற்றுவரும் 160க்கும் அதிகமான சக அபிவிருத்திஅடைந்துவரும் நாடுகளில் உள்ள 200 000க்கும் அதிகமானவர்கள் பயன்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தினால் பங்காளி நாடுகளின் மனித வள அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பினை உறுதிசெய்யும் மிகவும் முக்கியமான கருவியாக இத்திட்டம் உருவாகியுள்ளது.  ITEC நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கைக்காக வருடாந்தம் 402 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்திய இராஜதந்திர தூதுவராலயங்களால் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு திட்டமானது உலகம் முழுவதிலும் ITEC தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
28 செப்டெம்பர் 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.