தூத்துக்குடியிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா… கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 சகோதரர்கள் சடலமாக மீட்பு

தூத்துக்குடியிலியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் சுற்றுலா வந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். தண்ணீர் அதிகமாக சென்றதால் இதில் 6 பேர் தண்ணீரில் மூழ்கி மாயமானார்கள். அதில் மூன்று பேர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என உறவினர்கள் நெஞ்சில் அடித்து கொண்டு கதறியது காண்போரை கலங்கவைத்தது.

கொள்ளிடம் ஆற்றில் குவிந்த மக்கள்

தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியை சேர்ந்த 40 நபர்கள் நேற்று இரவு பேருந்து மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காலை பூண்டி மாதா கோயில் பகுதி இருக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி பத்துக்கும் மேற்ப்பட்ட ஆண்கள் குளித்துள்ளனர்.

பேருந்தில் வந்த பெண்கள் சிலர் ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது கவனமாக குளிக்க வேண்டும் என ஆற்றுக்குள் இறங்கிய ஆண்களிடம் கூறியுள்ளனர். பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடுறோம் கோயிலுக்கு போகலாம் என கூறிவிட்டு உற்சாகமாக ஆற்றுக்குள் இறங்கியதாக சொல்லப்படுகிறது.

கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதாலும், ஆற்றுக்குள் ஆழம் அதிகமாக இருந்ததாலும் குளித்து கொண்டிருந்தவர்களில் ஆறு பேர் தண்ணீருக்குள் தத்தளித்த படி மூழ்கியுள்ளனர். உடன் குளித்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளனர். அதற்குள் ஆறு பேரும் தண்ணீரில் மூழ்கி மாயாமானர்கள். இதையடுத்து அருகே உள்ள காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

ஆற்றுக்குள் ஆறு பேர் மாயமான தகவல் பரவிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பலரும் ஆற்றங்கரையில் குவிந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடியதில் முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கரைக்கு எடுத்து வரப்பட்டனர். இதை பார்த்த உடன் சுற்றுலா வந்தவர்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினர்.

உயிரிழந்தவர்கள்

இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. தண்ணீரில் மூழ்கியுள்ள மற்றவர்களை தீவிரமாக தேடும் பணி நடைப்பெற்று வந்தது. இதில் மற்றொருவரும் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த நிலையில் சடலமாக மீடக்கப்பட்ட மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என கூறப்படுகிறது. சுற்றுலா வந்த இடத்தில் மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களை மட்டுமின்றி அப்பகுதி முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.