சமாளிக்க கூடிய நிலையில் பணவீக்கம் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்புதான் உயர்கிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது,’ என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக கடந்த 12ம் தேதி அமெரிக்கா சென்றார். அவர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் நேற்று பங்கேற்றார்.

பின்னர், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, இந்திய பொருளாதாரம், மக்கள், தனியார் நிறுவனங்களை அமலாக்கத்துறை அச்சுறுத்துவது உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் நாணய மதிப்பும் குறைந்து வருவகிறது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் நாணய மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் நன்றாக உள்ளது. பணவீக்கம் சமாளிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளது.

அமலாக்கத்துறை முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது. சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்பாக இருந்தாலும், முதலில் மாநில அல்லது பிற புலனாய்வு அமைப்பினரால் முதலில் கண்டறியப்படுகிறது. அதன் பின்னரே அமலாக்கத்துறை அதனுடைய விசாரணை நடவடிக்கையை தொடங்குகிறது. பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை பயன்படுத்தப் படவில்லை. இருப்பினும், முறையான தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே தனது வேலையை தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.