2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ அமைக்க முடிவு

சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் (மல்டி மாடல் இன்டகிரேஷன் ) அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி 3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையில் 45.8 கி.மீ நீளத்திற்கும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47.0 கி.மீ நீளத்திற்கும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட நீட்டிப்பு திட்டத்தில் 3-வது வழித்தடத்தில் கேளம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும், சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும், 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரையிலும், 5-வது வழித்தடத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 கட்ட திட்டத்தில் மொத்தம் 128 நிலையங்கள் அமைய உள்ளன. இந்நிலையில், இவற்றில் 12 ரயில் நிலையங்களை தேர்வு செய்து ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் கிண்டி மற்றம் வண்ணாரப்பேட்டையில் மல்டி மாடல் இன்டகிரேஷன் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த இடங்களில் இதுபோன்ற போக்குவரத்து முனையங்களை அமைக்கலாம் என்று ஆய்வு நடத்தப்பட்டு 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும்போதே இந்தத் திட்டங்களை செயல்படுத்தவது எளிது என்பதால் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.