பாக்.,கில் ஹிந்து பெண்களை மதம் மாற்றி கட்டாய திருமணம்| Dinamalar

கராச்சி : பாகிஸ்தானில், கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஹிந்து சிறுமிக்கு, 16 வயது தான் ஆகிறது என மருத்துவ ரீதியாக நிரூபித்தும் அவரை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்த ஹிந்து சிறுமி, கடந்த ஆக., 12ம் தேதி மில் வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிந்த போது, நான்கு பேர் அவரை கடத்தி சென்றனர். அந்த சிறுமியை முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, பலுாசிஸ்தான் மாகாணத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார்.அவரை, ஹைதராபாதில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் பெற்றோருக்கு எதிராக அவரை திருமணம் செய்து கொண்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கு விசாரணையின் போது ‘சிறுமிக்கு 16 வயது தான் ஆகிறது’ என, பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், திருமண சான்றிதழில் 19 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதில், அவருக்கு 16 வயது மட்டுமே ஆவதாக முடிவுகள் தெரிவித்தன.ஆனாலும், சிறுமியை காப்பகத்தில் இருந்து விடுவிக்க மறுத்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சிந்து மாகாணத்தில், ஹிந்து பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கை குறித்த தீர்மானம் அம்மாகாண சட்டசபையில் இருமுறை நிராகரிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.