“அண்ணாமலை நாகரிகமில்லாமல் தரக் குறைவாகப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" – கி.வீரமணி காட்டம்

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு திராவிடர் கழகத்தில் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “கடலூரில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது… நான் சாப்பிடப் போகும்போது என்ன சொல்லிட்டு போனேன்? மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கு எல்லாம் பதில் கேப்ப – அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா… நவுருங்க” என்று கடுமையாகப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

இதே போன்று, சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 27.05.2022 அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பா.ஜ.க. சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததைக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, “காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டது, விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா?” என்று செய்தியாளரிடம் கேட்டார்.

கி. வீரமணி

இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்தபோது, அதைக் காது கொடுத்துக் கேட்காமல், அவரைப் பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் கூறினார். அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்தபோது, “சரி, 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அறிவாலயத்தில் 2000 ரூபாய் கன்பார்ம்., நாங்க கூட 1000 போட்டு 3000 ரூபாய் தருகிறோம்“ என்றும் எந்தவித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் கூறினார். இவை, கேள்வி கேட்கும் செய்தியாளர்களை இழிவுபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கை.

இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்ணாமலை

அதே போல 15.07.2021 அன்று அண்ணாமலை – பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், “நம்மளை பத்தி பொய்யா செய்தி போடுறானுங்க. என்ன பண்ணலாம்…. அதையெல்லாம் நீங்கள் மறந்து விடுங்கள். அடுத்த ஒரு 6 மாதத்திற்குள் அந்த மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையில் எடுக்கலாம். தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்தவொரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும், முன்னாள் மாநில தலைவராக இருந்த முருகன் அய்யா தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அமைச்சராக உள்ளார். எல்லா ஊடகங்களும் அவருக்கு கீழே தான் வரப் போகுது. அப்ப நாம பார்த்துக்கொள்ளலாம்“ என்று பேசியிருந்தார்.

கி. வீரமணி

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜனநாயகத்தின் நான்காவது தூணை மதிக்கிற லட்சணமா இது? பத்திரிகையாளர்களுக்கு ஏற்படுவதைவிட இக்கட்சிக்கு ஏற்படும் அவமானம் பற்றி யோசிக்க வேண்டாமா அவர்! இந்தியாவை ஆளும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், மேனாள் ஐ.பி.எஸ் அதிகாரி – இப்படி நாகரிகமில்லாமல் தரக் குறைவாகப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர் சங்கம் கண்டித்து, வருத்தம் தெரிவிக்கச் சொல்லியிருப்பதும் சரியானதே!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.