சேலம்: காவலருக்கு அடி உதை; கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள்! – குற்றம்சாட்டும் பெற்றோர்… என்ன நடந்தது?

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் அசோக். இவர் ரோந்து வாகன டிரைவராக உள்ளார். கடந்த 25-ம் தேதி இவருக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாதாரண உடையில் தனது டுவீலரில் சின்ன திருப்பதி பஸ் ஸ்டாப் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அசோக்கின் டூவீலரை மோதுவது போல, 3 டூவீலர்களில் 7 பேர் வேகமாக வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த அசோக் அந்த இளைஞர்களைச் சிறிது தூரம் வண்டியில் விரட்டிச்சென்று கண்டித்து, இளைஞர்களில் ஒருவரை அறைந்திருக்கிறார்.

அதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், “பேசிக்கொண்டிருக்கும்போதே எதற்கு அறைந்தீர்கள்?” எனக் கேட்டு பதிலுக்குத் தாக்கியிருக்கின்றனர். அதையடுத்து, தன் நண்பர்களுக்கு போன் செய்து அங்கு வரவழைத்த அசோக், அந்த இளைஞர்களைத் தாக்கியிருக்கிறார்.

காவலர் அசோக்

இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு போலீஸ் ரோந்து வாகனம் வந்துள்ளது. அதன்பின் விசாரித்த எஸ்.ஐ ஒருவர், அசோக் மது அருந்தியிருப்பது தெரிந்து, அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்ததில், மன்சூர் (20), முகமது (19), அப்துல்லா (20), ரஹ்மான் (20) என்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர்கள், “நாங்கள் கன்னங்குறிச்சி ஏரியில் போட்டோ ஷூட் நடத்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் வாகனங்களை வழிமறித்து நிறுத்திய அசோக், `இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா’ என ஒருமையில் பேசினார். மேலும், எங்களை முதலில் தாக்கியதும் அவர்தான். அவர் போலீஸ் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் ஹெல்மெட்கூட அணியாமல், காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு வந்தார். நாங்கள் பப்ளிக் என் நினைத்துத்தான் பதிலுக்குத் தாக்கினோம்” எனக் கூறியிருக்கின்றனர்.

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர் காவலர் அசோக் மீதும் தவறு இருக்கும் பட்சத்தில், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கின்றனர். இது குறித்து காவலர் அசோக்கிடம் பேசியபோது, “அவர்கள் வேகமாக வந்தார்கள் என்பதால்தான் அவர்களை நிறுத்திக் கேட்டேன். ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னை தாக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் அருகிலிருந்த என் உறவினர்கள் சிலர் வந்து அந்தக் கும்பலைப் பிடித்தனர்” என்றார்.  

மேலும் இது குறித்துக் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேசினோம். “விடுமுறை நாள் என்பதால் சுற்றிப்பார்ப்பதற்காக கன்னங்குறிச்சி சென்றுள்ளனர். திரும்பி வரும்போதுதான் இம்மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் பேசிக்கொண்டிருக்கும்போதே கன்னத்தில் தாக்கியுள்ளார். அதுவும் அடிப்பதற்குமுன்பு இழிவாகவும் பேசியுள்ளார். இதனால் எங்கள் பிள்ளைகள் பதிலுக்குத் தாக்கியிருக்கின்றனர்.

அதன்பிறகு பொதுமக்கள் வந்து தடுத்தபோதுதான், காவலர் என்று தெரிவித்துள்ளார். இதில், ஒரு காவலர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்காமல் தன் நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துத் தாக்கியுள்ளார். இது எந்தவிதத்தில் நியாயம். அவர், தண்டிக்க வேண்டும் என்றால் சட்டப்படி தண்டித்திருக்க வேண்டும். இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இதில், எங்களது பிள்ளைகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு பிரச்னைக்குக் காரணமான காவலர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் அளித்தாலும் வாங்க மறுக்கின்றனர் காவல் நிலையத்தில்” என்றனர்.

சேலம் மாநகர தலைமையக காவல் துணை ஆணையர் இராதாகிருக்ஷ்ணன்

இது தொடர்பாக சேலம் மாநகர தலைமையக காவல் துணை ஆணையர் இராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததில் காவலர் முதலில் தாக்கியுள்ளார். பின்னர் அந்த இளைஞர்கள் பதிலுக்குத் தாக்கியுள்ளனர். இதில், காவலர் அசோக்குக்கு கைகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் தரப்பில் யாரும் புகார் அளிக்க முன் வராததால், காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தனிநபரைக் கும்பலாகத் தாக்கிய குற்றத்திற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்” என்றார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.