கேரள மாணவியின் நர்சிங் படிப்புக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உதவி| Dinamalar

திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் மாணவியின் நர்சிங் படிப்புக்கான நான்காண்டு செலவை ஏற்றுள்ள தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, ஆலப்புழா மாவட்ட கலெக்டர் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி, பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்றார்.இவரது தந்தை கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, மாணவியின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதனால், நர்சிங் படிக்க விரும்பிய மாணவியால் படிப்பை தொடர முடியவில்லை.

இது தொடர்பாக, ஆலப்புழா கலெக்டர் கிருஷ்ண தேஜாவை சந்தித்து மாணவியின் குடும்பத்தினர் உதவி கேட்டனர்.

கலெக்டர் உதவியுடன் தனியார் கல்லுாரியில் மாணவிக்கு இடம் கிடைத்தது.

அடுத்த கட்டமாக, நான்காண்டு படிப்பு மற்றும் விடுதி செலவுகளுக்கு உதவி செய்ய, ஆட்களை தேடும் பணியில் கலெக்டர் நேரடியாக ஈடுபட்டார்.அவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் அவருக்கு ஏற்கனவே பரிச்சயம் இருந்தது.

இது குறித்து அல்லு அர்ஜுனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததும், மாணவியின் நான்காண்டு படிப்பு செலவை ஏற்க அவர் ஒப்புக்கொண்டார்.இந்த விபரங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கலெக்டர் கிருஷ்ண தேஜா, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.