தனித்தமிழ் தேசம் அமையும் வரை பிரபாகரன் வழியில் போராடுவோம் – வைகோ

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 68ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்காக தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய பிரபாகரனை சிங்கள படை மற்ற ஏழு வல்லரசு நாடுகளின் படைகளை கொண்டு அழித்துவிட்டது. விடுதலை புலிகளின் போரின் கடைசி கட்டப் போரில் கடைசி நேரத்தில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இலங்கை சிங்கள கடற்படை இன்றுவரையில் தமிழக வீரர்களை கொல்வது , தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மற்றும் படகுகள் உள்ளிட்ட பொருட்களை அபகரிப்பது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகிறது. 

இலங்கை தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் தீ இன்னும் அணையவில்லை. இலங்கையில் சிங்கள தேசம் தனி, தமிழர்கள் தேசம் தனி என அமையும் வரையில் மதிமுக தொடர்ந்து பிரபாகரன் வழியில் போராடும்.

தமிழகத்தில் உள்ள ஆளுநர் தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் முற்றிலும் எதிரானவர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, ஆளுநர் மத்திய பாஜக அரசிற்கு ஊது குழலாக செயல்பட்டு வருகிறார்” என்றார்.

மேலும் தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே தொடரும் என்றும் திமுக கூட்டணியே மெகா வெற்றியை பெரும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.