11 ஆண்டுகளுக்கு முன் திருட்டுபோன சிலைகள் கோயிலில் ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த பல கோடி மதிப்பிலான ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகீரியம்மன் உள்ளிட்ட 6 சிலைகள் கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் திருடு போனது. இந்த சிலைகள் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்த ஷோபா துரைராஜன் வீட்டில் இருந்து, இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கலைக்கூடத்தில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சிலைகளை மீட்டனர். ஆவணங்களுடன் வந்ததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயிந்த்முரளி, ஐஜி தினகரன் மற்றும் குழுவினர் இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்திடம் இச்சிலைகளை ஒப்படைத்தனர்.வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதனால் அப்பகுதி மக்கள் தமிழக அரசு நன்றி தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.