ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. நாளை மறுநாள் 23-ம் தேதி அங்கு அனுமன் ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காகக் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
அனுமன் ஜயந்தியையொட்டி 23-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கணபதி அபிஷேகமும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூலவருக்குத் திருமஞ்சனமும், காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ஆஞ்சநேயர் மலர் அலங்கார தரிசனமும் நடைபெற இருக்கிறது.

மதியம் 1.30 மணிக்கு வடைமாலை சாற்றுதலும், மாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசமும் சாற்றப்படுகிறது.
அனுமன் ஜயந்தியன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் வார வழிபாட்டுக் குழு சார்பில் பிரசாதமாக லட்டும், நாள் முழுக்க அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணியில் வார வழிபாட்டுக் குழுவினர் கடந்த மூன்று நாள்களாக ஈடுபட்டு வந்தனர்.

தற்போது 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு அவற்றை பிரசாதப் பொட்டலமாகத் தயாரிக்கும் பணியில் வழிபாட்டுக் குழுவினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வழிபாட்டுக்குழுத் தலைவர் பிரகாஷ், செயலாளர் குமார் நம்மிடம் கூறியதாவது,
“லட்டு தயாரிக்கும் பணியில் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டு, தற்போது 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் லட்டு, செந்தூரம், மஞ்சள் கயிறு, துளசி போன்றவற்றை பேக்கிங் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியைத் தொடர்ந்து எங்கள் வார வழிபாட்டுக்குழு கடந்த 35 ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கோயில் சுயம்புவாக உருவானது. சுபகாரியம் உள்பட எந்த நல்ல காரியம் தடைப்பட்டாலும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தியும், வெண்ணெய் காப்பு செய்தும் வேண்டிக்கொண்டால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோயில் வளாகத்தில் பரிகார விநாயகர் சிலை உள்ளது. இந்தப் பரிகார விநாயகருக்கு தீபம் ஏற்றி, அருகம்புல் மாலை அணிவிப்பது அவ்வளவு சிறப்பாகும். அனுமன் ஜயந்திக்கு முந்தைய நாளான 22-ம் தேதி மாலை ஆஞ்சநேயரின் புதிய உற்சவர் முக்கிய வீதிகளின் வழியே திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்” என்றார்.