அதிகரிக்கும் கொரோனா – மக்கள் எச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி அட்வைஸ்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருவதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, நடப்பு டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நடப்பு 2022 ஆம் ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையுமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அதன் விவரம்:

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். 2022 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் தான், நாட்டின் 75வது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட்டது. ‘அம்ரித் கால்’ துவங்கியது. இந்தியா வேகமாக வளர்ச்சி பெற்றதுடன், உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது. ஜி20 அமைப்பின் தலைமை பதவி இந்தியாவிற்கு கிடைத்தது.

ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, 2022 ஆம் ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வரலாற்றை போற்றும் காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் இடையே உள்ள ஒற்றுமையின் பல வண்ணங்கள் வெளிபட்டன. இந்தாண்டு சுதந்திர தின விழாவின், போது ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் நம்மை எல்லாம் பெருமைப்படுத்தியது. கல்வி, வெளியுறவு கொள்கை மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் இந்தியாவை புதிய உயரத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு சென்றார்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயனளிக்கிறது என்பது மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த மையத்தின் தகவலின்படி, தொடர்ந்து யோகா செய்தால், புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைகிறது. கடந்த சில ஆண்டுகளில், சுகாதாரத்துறையில், பல்வேறு சவால்களில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.

சின்னம்மை, போலியோ போன்ற நோய்கள் இந்தியாவில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது. கருங்காய்ச்சல் எனப்படும் நோயும் இந்தியாவில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. தற்போது பீகார், ஜார்க்கண்டின் 4 மாவட்டங்களில் மட்டுமே இந்த நோய் உள்ளது. பல நாடுகளில் கோவிட் அதிகரித்து வருகிறது. முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதுடன், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.