சென்னை திருவல்லிக்கேணி, சாமி தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் கடந்த 16-ம் தேதி இரவு வீட்டின் வாசலின் தன்னுடைய விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் பைக்கை எடுக்க வந்த சரத்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் நிறுத்தியிருந்த இடத்தில் பைக்கைக் காணவில்லை. சரத்குமார், பைக்கை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் சரத்குமார் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது பைக்கைத் திருடியது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் என்கிற தமிழர் (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து லோகேஷை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரித்தபோது அவர் பைக்கைத் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் அவர், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை திருடி வந்தது தெரியவந்தது. அதனால் அவரிடமிருந்து மூன்று விலை உயர்ந்த பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதான லோகேஷ் நள்ளிரவு நேரத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பைக்குளை முதலில் நோட்டமிடுவான். பின்னர் அந்தப் பைக்குகளைத் திருடி ஒரிடத்தில் மறைத்து வைப்பான். அதை விற்பதற்கு முன் எங்களிடம் சிக்கிக் கொண்டான். விலை உயர்ந்த பைக்குகளின் லாக்குகளை லோகேஷ் எளிதாக திறப்பதில் கில்லாடியாக இருந்து வந்திருக்கிறான். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.