ஜிஎஸ்டியில் உரிய இழப்பீடு கோரியும் செஸ் வரியைக் காரணம் காட்டி மறுக்கப்படும் மாநில பங்களிப்பு: சிஏஜி அறிக்கையால் அம்பலமான பகீர் தகவல், மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியுடன் சேர்த்து செஸ் வரி வசூலிக்கப்பட்டாலும், மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி பங்களிப்பை ஒன்றிய அரசு குறைத்து வழங்கியுள்ளது, சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.  தங்களுக்கு உரிமை உடைய வரி பகிர்வை வழங்குமாறு மாநிலங்கள் கோரும் நிலையில், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டும் செஸ் வரியில் பங்களிப்பு தர ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. நிகர வரி வசூல் உயர்ந்தபோதும், மாநில வரி பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2017 ஜூலையில், ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. மாநிலங்களின் பல்வேறு வரிகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால், மாநிலங்களின் வரி வருவாய் பறிபோய்விட்டது.

இருப்பினும், ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்குவது என ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. இருப்பினும், ஜிஎஸ்டியை அமல்படுத்திய பிறகு, வரி பங்களிப்பு குறைக்கப்பட்டதாகவும், தாமதமாக இழப்பீட்டை வழங்குவதாகவும் மாநில அரசுகள் குற்றம் சாட்டின. சில நேரங்களில், மாநிலங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகுதான் ஜிஎஸ்டி வரி பகிர்வை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான், சமீபத்திய சிஏஜி அறிக்கை மூலம் பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில், மாநிலங்களுக்கு வரி பங்களிப்பு முழுமையாக வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. செஸ் வரி மூலம் ஒன்றிய அரசு அதிக வரி வருவாயை ஈட்டி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசு சாலை மற்றும் உள்கட்டமைப்புக்கான செஸ் வரியாக ரூ.1,95,987 கோடி வசூலித்துள்ளது. ஆனால், ரூ.2,51,738 கோடி செலவு செய்துள்ளது. இதுபோல் சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக மேற்கண்ட நிதியாண்டில் ரூ.52,732 கோடி வசூலிக்கப்பட்டிருந்தாலும், அதற்கும் அதிகமாக, ரூ.78,287 கோடி செலவிடப்பட்டுள்ளது, என்றார். ஆனால், சிஏஜி அறிக்கையை பொறுத்தவரை, மாநிலங்களுக்கு வரி பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளதை பல வகையிலும் சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, மத்யமிக் மற்றும் உச்சாதர் சிக்ஷா கோஷ் மூலம் கல்விக்கான செஸ்வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டத்துக்கு 2017 ஜூலை மாதம் அமைச்சரவையல் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், இதற்கான கணக்கீட்டு நடைமுறைகள் இறுதி செய்யப்படாததால் இந்த திட்டம் செயல்பாட்டுக்கே வரவில்லை. ஆனால், இதன்மூலம் செஸ் வரியை ஒன்றிய அரசு வசூலித்திருக்கிறது என்பதை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டாலும், செஸ் வரியாக அதிகமாகவே ஒன்றிய அரசு வசூலித்து வந்துள்ளது. 14வது நிதி கமிஷன் அறிக்கைப்படி, 2019-20 நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான வரி பகிர்வு முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளதை அறிய முடிகிறது. 2019-20 நிதியாண்டில், முந்தைய ஆண்டை விட மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, செஸ் மற்றும் கூடுதல் வரியாக கடந்த 2021-22 நிதியாண்டில் 28.1 சதவீதம் வசூலாகியுள்ளது. இது 2019-20 நிதியாண்டில் 18.2 சதவீதமாக இருந்தது. இதில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் வரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாநில அரசுகள் அதிக இழப்பீடு வழங்க வேண்டும் கோரி வருகின்றன. ஆனால் 50:50 சதவீத வரி பகிர்வையே தொடர்ந்து வருகிறது. ஆனால், செஸ் வரியில் பகிர்ந்தளிக்க ஒன்றிய அரசு மறுப்பதால், நியாயமாக மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவதில்லை என்ற குற்றச்சாட்டை மாநிலங்கள் முன்வைத்து வருகின்றன.

ஒன்றிய அரசின் நிகர வரி வசூலில், 2019-20 நிதியாண்டில் 15 சதவீதம், 2020-21 நிதியாண்டில் 9 சதவீதம் மாநிலங்களுக்கு வரி பகிர்வு குறைக்கப்பட்டுள்ளது. செஸ் வரியை காரணம் காட்டி மாநிலங்களுக்கான வரி பகிர்வு குறைக்கப்பட்டு வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சிஏஜியின் அறிக்கை அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது. செஸ் வரியை காரணம் காட்டி ஜிஎஸ்டி இழப்பீட்டை குறைக்கும் ஒன்றிய அரசின் செயல், நிதி அதிகாரத்தை தங்களிடமே வைத்துக் கொள்ளும் போக்காகவே பார்க்கப்படுகிறது. இது மாநிலங்களில் சுயாட்சி கொள்கைக்கு எதிரானதாக உள்ளதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.