பட்டாசு ஆலைகள் வெடி விபத்தில் 3 பேர் பலி: மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது

ஏழாயிரம்பண்ணை / சிவகாசி: சாத்தூர், சிவகாசி அருகே, பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாயினர். இதுதொடர்பாக ஆலைகளின் மேலாளர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டியை அடுத்த கனஞ்சான்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரி (32), சங்கர் (60) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியாயினர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன் (60), அவரது மனைவி ஆறுமுகத்தாய் (55), மேலாளர் கண்ணன் (35), ஆலை குத்தகைதாரர் கந்தசாமி (56) ஆகிய 4 பேர் மீது, வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். நேற்றுகாலை மேலாளர் கண்ணனை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள மூவரை தேடி வருகின்றனர். சிவகாசி அருகே, செங்கமலப்பட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஓர் அறையில் வேலை பார்த்த திருத்தங்கல் ரவி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

மற்றொரு தொழிலாளி சாமுவேல் ஜெயராஜ் என்பவர், 70 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (70), ஆலை மேலாளர் கோபால்சாமி (65), போர்மேன்கள் காளியப்பன் (44), ராம்குமார் (32) ஆகியோர் மீது, சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.  நேற்று காலை ஆலை மேலாளர் கோபால்சாமி, போர்மேன்கள் காளியப்பன், ராம்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* காயமடைந்த இருவர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில், கீழச்செல்லையாபுரம் குருநாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில் 15 அறைகள் உள்ளன. 30க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 14ம் தேதி, விதிமுறைகளை மீறி, பேன்சி ரக வெடிகளுக்கு மருந்துக்கலவை தயாரித்ததில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.

அப்போது பணியில் இருந்த மத்தியப்பிரதேச மாநிலம், சிக்கிபாவுரா கிராமத்தை சேர்ந்த ராம்பால் ஆதிவாசி (27), வினோத் ராம்பால் (35), சந்திப்கோல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திப்கோல், ராம்பால் ஆதிவாசி ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். வினோத் ராம்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் சாமுவேல் கொடுத்த புகாரின்பேரில், ஆலை உரிமையாளர் குருநாதன், மேலாளர் ஆறுமுகம், குத்தகைதாரரான கீழசெல்லையாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார், போர்மென் வைரமுத்து ஆகிய 4 பேர் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.