Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் – விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். சமீபத்தில் அவர் திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்து பேசியது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் திரைத்துறையில் நிலவும் ‘காஸ்டிங் கௌச்’ (பாலியல் சுரண்டல்) குறித்து கேட்கப்பட்டது.

Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி

அதற்கு அவர், “உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நடப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். எனக்கு இது போன்ற அனுபவம் இதுவரை ஏற்பட்டதில்லை என்பதால் இப்படிச் சொல்கிறேன்” என்றார். தொகுப்பாளர், “ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் இளம் வயதிலேயே நுழைந்ததால், பாலியல் சுரண்டலில் இருந்து தப்பித்திருக்கலாம். உங்களுக்கு நடக்காவிட்டாலும், திரையுலகில் இது போன்ற விஷயங்கள் இருக்கத்தானே செய்கிறது?” என்று கேட்டபோது, “எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.” என பதிலளித்தார்.

ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஹன்சிகாவின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர். ஒரு பயனர், “எனக்குச் சர்க்கரை நோய் இல்லை என்பதால், அந்த நோயே உலகில் இல்லை என்று சொல்வதைப் போல இது இருக்கிறது” என்றார். மற்றொருவர், “பாதுகாப்பான சூழலில் வளர்ந்த ஹன்சிகா, மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகப் பேசுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், “உண்மையாக உழைப்பவர்களுக்கு இது நடக்காது என்று சொல்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் உழைக்கத் தயாராக இல்லை என்று அவர் கூறுகிறாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.