திரிபுரா சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

அகர்தலா,

பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், அடுத்த மாதம் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது.

இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் திரிபுரா மாநில தலைவர் பியுஷ் கந்தி பிஸ்வாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

திரிபுரா சட்டசபை தேர்தலுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் சேராது. ஏனென்றால், முந்தைய கம்யூனிஸ்டு ஆட்சிக்காலத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கூட அந்த கூட்டணிக்கு ஓட்டு போட மாட்டார்கள். கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவின. அதே கதிதான் இத்தேர்தலுக்கும் ஏற்படும். எனவே, அந்த கூட்டணியில் இருந்து விலகியே இருக்க விரும்புகிறோம்.

திரிபுராவில், எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிட போகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது. ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்.

மம்தா பிரசாரம்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிப்ரவரி 6-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக திரிபுரா வருகிறார். மறுநாள், வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

அதுபோல், கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, பிப்ரவரி 2-ந் தேதி, தேர்தல் பிரசாரத்துக்காக வருகிறார். 2 கூட்டங்களில் அவர் பங்கேற்பார். இதுதவிர, கட்சியை சேர்ந்த சினிமா நட்சத்திரங்களும் பிரசாரத்துக்காக வருகிறார்கள் என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.