ரஜினியின் திரைப்படக் கல்லூரி நண்பன்; மன்றத்தின் நிர்வாகி; வி.எம்.சுதாகர் மறைவு; ரஜினி வேதனை

நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும், ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்த வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்புக்கு ரஜினி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். ”என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

மன்ற கூட்டத்தில்..

வி.எம்.சுதாகர் மறைவு குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்தேன்.

”ரஜினி சாரும் சுதாகரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் அதிலிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்களானார்கள். இயக்குநர் ஆர்.சி.சக்தியின் ‘ராஜாங்கம்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ‘பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்க வேண்டியவர்.. ஆனால், அதில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன்பின் ஆர்.சி. சக்தியிடம் உதவி இயக்குநராக சில படங்களில் வேலை செய்திருக்கிறார்.

அதன்பின் சுதாகரை அழைத்துக் கொண்ட ரஜினி, அவரை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார். ‘அருணாசலம்’ ஹோட்டலில் கணக்காளராக இருந்து வந்தார். ரஜினி அந்த ஹோட்டலை லீசுக்கு விட்டபின், ராகவேந்திரா மண்டபத்தை கவனிக்கும் பொறுப்பு வகித்து வந்தார் சுதாகர்.

வி.எம்.சுதாகர்

பின்னர் ரசிகர் மன்றத்தை கவனித்தும் வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு உடல்நலன் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இறந்துவிட்டார். அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று நேரில் சென்று சுதாகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார் ரஜினி. சுதாகருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.