மத்திய பட்ஜெட் 2023-24 | “ஏமாற்றமே மிஞ்சுகிறது” – வைகோ கருத்து

சென்னை: “பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்?” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2023-24 குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று கூறி உள்ளார். ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்?

வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்தும், வேளாண் கடன் வட்டி குறைப்பு பற்றியும் அறிவிப்பு இல்லை.

உற்பத்தித் தொழில்துறை சரிவிலிருந்து மீண்டு எழ உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பை அதிகம் அளிக்கும் துறைகள். ஆனால் அவற்றின் மேம்பாட்டிற்கு 15 விழுக்காட்டிற்கு மேல் ஜிஎஸ்டி வரி கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க வெறும் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது.

நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 விழுக்காடு குறைந்திருப்பதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 விழுக்காடு வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளது. எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைப் போல இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறையினர் கோரினர். அதுபற்றிய அறிவிப்பும் இல்லை.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் இதனால் பயன்பெற்ற இளைஞர்கள் எத்தனை லட்சம் பேர் என்று ஒன்றிய அரசு அறிவிக்குமா? வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

தனிநபர் வருமான வரி வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் வரவு – செலவு திட்டத்தில் 7 முக்கிய கூறுகளை இலக்காக அறிவித்துள்ளார். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஏழைகளின் முன்னேற்றம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை நிறைவேற்ற மாநில அரசுகளின் பொறுப்பும், கடமையும் அதிகம் இருக்கிறது என்பதையும் பாஜக அரசு உணர வேண்டும்.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் கூடாது. ஜிஎஸ்டி நிதி அளிப்பதையும் தாமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டின் புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தால்தான் உண்மையான நிலை தெரியும்.

பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டங்களுக்கு 19,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் காவிரிப் பாசனப் படுகை மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டப் பணிகளை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டலாம். கூட்டுறவு சங்கங்கள் தரவு தளம் அமைப்பதன் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிய அரசு முழுமையாகக் கொண்டு செல்லும் நிலைதான் உருவாகும். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை; ஏமாற்றமே மிஞ்சுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.