"என்னைப் போல் பலரை ஏமாற்றுகிறார்", "அவர் என்னை துன்புறுத்தினார்"-இளைஞர், இளம்பெண் மாறி மாறிப் புகார்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு (30). இவர், “திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அரசு சுகாதார மையத்தில் செவிலியராகப் பணியாற்றி வரும் எஸ்தர் (30) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவர், திருமணம் செய்வதாகக் கூறி என்னிடம் 6.30 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டார். அந்தப் பெண், மருத்துவர்கள் உட்பட பல ஆண் நண்பர்களுடன் பழகி தொடர்ச்சியாக பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்” என திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார். அவர் புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இது குறித்து நம்மிடம் பேசிய தினேஷ்பாபு, “துபாயில் நல்ல ஊதியத்தில் 2 ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். பிறகு திருப்பூர் வந்து கார்மென்ட்ஸ் தொழில் செய்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும்போது செவிலியராகப் பணியாற்றும் எஸ்தர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தோம். எஸ்தர் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் கூறினார். பின்னர், என்னை திண்டுக்கல்லிலுள்ள தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் மோதிரங்கள் மாற்றி திருமணம் செய்தோம். முறையாகப் பதிவுசெய்யலாம் என்றபோது, `பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என மறுத்துவிட்டார். இதையடுத்து சேர்ந்து வாழத் தொடங்கினோம். 

அப்போதுதான் அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. அந்த நபர் என்னைத் தாக்கிக் கொலைமிரட்டல் விடுத்தார். மேலும், எஸ்தர் அவரைப் போல மூவரிடம் நெருங்கிப் பழகி வந்தது தெரியவந்தது. இருப்பினும் அவர்மீதான பிரியத்தால் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டால் பிரச்னை தீரும் என நினைத்து அவருக்கு பணியிடமாறுதல் வாங்கிக் கொண்டு திருப்பூர் மாவட்டம் வந்து குடியேறினோம். ஆனால் அங்கு சென்ற 3 மாதங்களிலேயே மருத்துவர்களிடம் நெருங்கிப் பழகுவது, மூன்று, நான்கு நாள்கள் காரில் எங்காவது சென்றுவிட்டு திரும்புவது என இருந்தார். இது குறித்து கேட்டால் பணிநிமித்தமாக சென்றதாகக் கூறி சமாளித்தார். 

மோசடி

கடைசியாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவருடன் நெருங்கிப் பழகியது தெரியவந்தது. அவருடன் எடுத்த செல்ஃபி படங்களை பார்த்துவிட்டு தட்டிக்கேட்டேன். அப்போது ஏற்பட்ட தகராறில் தாக்கியும் விட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். நான் குடிபோதையில் இருந்ததால் அங்கும் பிரச்னையாகிவிட்டது. இதற்கிடையே எஸ்தரின் முதல் கணவர், ஒட்டன்சத்திரம் போலீஸாரிடம் பல ஆண் நண்பர்களுடன் தன்னுடைய மனைவி பழகிக் கொண்டு, தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாகப் புகார் அளித்தார். அதேபோல, எஸ்தருடன் பழகிய நபரின் மனைவி, தன்னுடைய கணவனை மீட்டுத் தருமாறு சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தார். 

இவ்வளவு நடந்த பிறகும் அவர் திருந்தி என்னுடன் வந்துவிட வேண்டும் என எண்ணி அவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் ஏறிச் சென்ற கார் பின்னே டூவிலரில் சென்ற என்னை இடித்து கீழே தள்ளிச் சென்றுவிட்டார். கால்முறிவு ஏற்பட்டு 2 மாதங்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அவருக்கு கூட்டுறவு சொசைட்டியில் இருந்த கடன், அவர் குழந்தைகளுக்கான மருத்துவச் செலவு என மொத்தம் 6.30 லட்சம் செலவு செய்தேன். இதுமட்டுமல்லாமல் குடும்ப நடத்த பல லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். என்னைப் போல யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், நான் இழந்த பணத்தை மீட்டு தரும்படியும், மோசடி செய்த எஸ்தர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளித்திருக்கிறேன்” என்றார்.

திருமணம்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து எஸ்தரிடம் பேசினோம். “தினேஷ்பாபு கூறுவது அனைத்தும் பொய். அவரைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தது உண்மைதான். அவருடன் சேர்ந்து வாழவில்லை. ஆனால் அவரிடம் பழகியபிறகு எனக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்தார். விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தி என்னுடைய மகன்களை லாரி ஏற்றிக் கொலைசெய்துவிடுவதாக மிரட்டினார். அவர் என்னை தொந்தரவு செய்வது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். ஏற்கெனவே இரண்டு முறை என்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதியளித்து போலீஸார் அவரிடமிருந்து கடிதம் பெற்றிருக்கின்றனர். அவர் எனக்குப் பணஉதவி செய்திருக்கிறார். அவருக்கு நானும் பணஉதவி செய்திருக்கிறேன். நான் யாரையும் மோசடி செய்யவில்லை. வேண்டுமென்றால் என் மீது வழக்கு தொடரட்டும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார். 

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் கேட்டபோது, “இந்த விவகாரத்தில் தினேஷ்பாபு, எஸ்தர் மற்றும் அவரின் கணவர் என ஒருவருக்கொருவர் மாற்றி, மாற்றி புகார் அளித்திருக்கின்றனர். ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர்கள் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்களிடம் விசாரித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.