அண்ணாமலை திட்டமும் எதிர்ப்புக்கு காரணமாகும் `அமைச்சர் கனவும்’ – டெல்லி ஆதரவு யாருக்கு?!

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மண்டபத்தில் நடைபெற்றது. கமலாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்டு கொண்டிருந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டு நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தில், “தமிழக பாஜகவை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பது என்பது தான் எனது திட்டம். அதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் தேசிய கட்சியின் மேனேஜர் இல்லை, ஒரு தலைவர் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு, வெற்றி பெறுவதற்கு உரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. ஒருவேளை தேசிய தலைமை அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகி ஒரு தொண்டனாகவே இருந்துவிட்டு போய்விடுவேன். தொடர்ந்து அதிமுக நம்மைவிட்டு விலக வேண்டும் என செயலாற்றி வரும் நிலையில், நாம் மட்டும் ஏன் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டும்” என்று அண்ணாமலை பேசிய விஷயத்தை முதன் முதலாக நம் ஜூ.வி- இணையத்தில் வெளியிட்டோம்.

இந்த செய்தி பரவிய அடுத்தடுத்த மணி நேரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, பா.ஜ.க-விலும் பேசு பொருளாக மாறியது. இதுவரை கட்சிக்குள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திய பாஜக சீனியர்கள், வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். அண்ணாமலையை விமர்சிக்கவும் தொடங்கினர்.

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “இரண்டு வருடங்கள் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்த பிறகு, தமிழக அரசியலில் இரண்டு ஆண்டுகளாக உற்று நோக்கிய பிறகு, நான் உறுதியாக நம்புகிறேன், மிகப்பெரிய மாற்றத்துக்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்தக் கட்சியுடன் கூட்டணி… அந்தக் கட்சியுடன் கூட்டணி என்று பேசுகின்ற அதிகாரம் எனக்கு இல்லை. அதற்கான நேரம் விரைவில் வரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இரண்டு வருடங்கள் அரசியலைப் பார்த்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். அதை என்னுடைய கட்சிக்குள் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன்.

கூட்டணியைப் பற்றி அதற்கான நேரம் வரும்போது எங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள். நான் வேலையை விட்டுவிட்டு, மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன். தவறுகள் செய்வதற்கு நான் தயாராக இல்லை. அந்த அடிப்படையில் சில வார்த்தைகளை நான் அன்று பேசியிருந்தேன். நானும் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிக்கொண்டுதான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியல் எனக்குத் தேவையில்லை என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம்… “கூட்டணி குறித்து அண்ணாமலை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது தவறு. அது கட்சியின் மைய குழுவில் பேசி முடிவெடுக்க எடுக்க வேண்டிய விஷயம். ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜ.க இடையிலான உரசல்கள் அதிகரிப்பதை அறிந்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. கிருஷ்ணகிரிக்கு வந்த போது, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நல்ல முறையில் தொடர்வதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். எல்லோரிடமும் பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என அறிவுறித்தி சென்றார். ஆனால், அவர் சொல்லி சென்ற சில நாள்களிலேயே எதை மனதில் வைத்து அண்ணாமலை பேசி வருகிறார் என்பது தெரியவில்லை.

அண்ணாமலை

பா.ஜ.க-வை பொறுத்தவரை வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது. ‘மோடி 3.O’–வில் கிட்டத்தட்ட 400-எம்.பி-களுக்கு மேல் பா.ஜ.க டார்கெட் செய்கிறது. தனிபெரும்பான்மையோடு இருக்கும் போது பல சட்டத்திட்டங்கள் கொண்டுவருவதற்கும் தயாராகி வருகிறது. எனவே ஒவ்வொரு மாநிலத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்றார் போல் திட்டம் தீட்டி வருகிறார் அமித் ஷா. அதன் அடிப்படையில் தான் ஜே.பி.நட்டா மூலமாக தமிழக பா.ஜ.க-வுக்கு அறிவுரையும் வழங்கினார். இதெல்லாம் அறிந்த அண்ணாமலை தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் முரண்பட்டு நிற்பது தமிழக பா.ஜ.க-வுக்கு ஆரோக்கியமான விஷயமில்லை” என்றவர், இதுவரை கட்சிக்குள் இருந்த சீனியர்களுக்கும், அண்ணாமலைக்குமான மோதல் வெளிபடையாக வந்ததற்கான காரணங்களை எடுத்து சொன்னார்.

“2024 மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து தமிழக பாஜக எம்.பி-கள் பெற்றுவிட்டால் அதில் மத்திய அமைச்சராக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு அதிமுக கூட்டணியோடுதான் 2024 மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதைத்தான் தேசிய தலைமையும் கணக்கு போடுகிறது. ஆனால், அண்ணாமலையோ மக்களவைத் தேர்தலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனது நடைப்பயணத்தைக் கூட சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதுகிறார். அண்ணாமலையின் இந்த போக்கு தமிழகத்தில் பாஜக-வினர் மத்திய அமைச்சர்களாக ஆகும் வாய்ப்பை தடுத்து நிறுத்துவதாக இருக்கிறது என்று சீனியர்கள் கருதுகிறாரகள். அதனால்தான் அவர் தேசிய தலைமை விடுத்த அறிவுரையையும் மீறி தனது தனிப்பட்ட எண்ணத்தை முன்னிறுத்தும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்” என்றார்.

‘அண்ணாமலை தனிகட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற பேச்சுகளும் எழ, ஏன் தொடர்ந்து அவரது பேச்சுக்கள் விமர்சனத்துக்குள்ளாகின்றன’ என்பது குறித்து அவரை நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்களோ, “இப்படி பரப்பினால் அண்ணாமலையும், பா.ஜ.க-வையும் பலவீனப்படுத்த முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வில் நீண்ட பயணத்திற்குதான் கட்சியில் இணைந்திருக்கிறார் அண்ணாமலை. அதனால் தனி கட்சி ஆரம்பிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அபத்தம். தமிழ்நாட்டில் இரு திராவிட கட்சிகளும், காசு கொடுத்து வாக்கு பெறும் அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது வேண்டாம் என்று நினைக்கிறார். தமிழ்நாட்டில் தனித்து நிற்கலாம் என்று அவர் சொன்ன பிறகு புதிய புதிய நபர்கள் இது பற்றி பேசுகிறார்கள். ஆதரிக்கிறார்கள்.

அண்ணாமலை, ஜே.பி.நட்டா, வானதி சீனிவாசன், எல்.முருகன்

அ.தி.மு.க உட்கட்சி பூசலில் பலம் இழந்து நிற்கிறது. அங்கு யாருடன் கூட்டணி பேசுவது என்கிற முடிவு இன்னும் வராமல் குழப்பம் இருக்கிறது. இப்படி இருக்க அ.தி.மு.க இல்லாமல், பா.ஜ.க-வால் தமிழ்நாட்டில் தனியாக கூட்டணி அமைக்க முடியாதா… மற்ற மாநிலங்களில் ஆட்சி அமைத்தது போல், அ.தி.மு.க வை வீழ்த்திதான் பா.ஜ.க வளர்கிறது என்று தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறாரகள். ஆனால், எங்களுக்கென்று ஒரு வலுவான கட்டமைப்பு இல்லாமல், இதை நாங்கள் செய்ததில்லை. ஏனென்றால் அப்படி ஒரு கட்சியை அழித்து நாங்கள் வளர்ந்தோம் என்றால் அது நிரந்தரமில்லை என்பது எங்கள் அனுபவம்.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி – பன்னீர் -அதிமுக – பாஜக

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அங்கு வெகுஜன தலைமை இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் கொள்கை, லட்சியங்களை விட வெகுஜன தலைவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான் அண்ணாமலை ஒரு முடிவை தெரிவித்திருக்கிறார். கட்சிக்குள் விமர்சிப்பவர்கள் அவநம்பிக்கையில் பேசுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால், அண்ணாமலை தனியாக நிற்கலாம் என்கிறார். எல்லோரும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் யோசிக்கிறார்கள். இதில் வழிமுறைகள்தான் வித்தியாசமாக இருக்கிறது. மத்திய தலைமை முழுக்க முழுக்க அண்ணாமலையின் குரலுக்கு செவி சாய்க்கிறது. ஒரு வேளை அதை தாமதமாக அறிவிக்கலாம். இல்லையென்றால் புத்திசாலித்தனமாக கையாள்வார்கள். எல்லோரும் ஒரே குரலில் பேசினால் அது ஜனநாயகம் இல்லை. இதற்கான முடிவு கூடிய விரைவில் தெரிய வரும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.