தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்: கடன் தொல்லையால் மருத்துவமனை ஊழியர் விபரீத முடிவு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியரொருவர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால்  தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (37). இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார்.
அப்படி ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ரூ.6 லட்சம் பணத்தை இழந்தததோடு கடன் பிரச்னையும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று வழக்கம் போல் காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி ரவிசங்கரை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. அதனை தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

image
அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இறந்து போன ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற ஆறு வயது மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.