உயர் நீதிமன்ற நீதிபதியாக பி.வடமலை பதவியேற்பு

சென்னை: மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருந்த பி.வடமலையை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதியாக வடமலை நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், அரசு தலைமைவழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், தி மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன் உள்ளிட்ட பலரும் நீதிபதி வடமலையை வாழ்த்தி வரவேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். நிறைவாக நீதிபதி வடமலை தனது பெற்றோருக்கும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், முன்னாள் நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த 1966 ஏப்.3-ம் தேதி பிறந்த வடமலை, உடுமலைப்பேட்டை அரசு கல்லூரியில் பி.காம். பட்டப் படிப்பையும், கோவை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்துள்ளார். 1990-ல் வழக்கறிஞராக பதிவு செய்து, 1995-ல் குற்றவியல் நடுவராக பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் நீதித் துறையில் 28 ஆண்டு அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 இடங்கள் காலியாக உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.