கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தல் நடைமுறைகல் நடத்தி முடிக்க வேண்டியது விதி ஆகும்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே மாதம் 24-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில்  மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள்  2.62 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.5 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள்  42,756 பேரும்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல் முறையாக 9.17 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். புதிய வாக்காளர் அடையாள அட்டைகோரி, 17 வயதிற்கு மேற்பட்டோர் 1,25,406 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏப்ரல் 1, 2023ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.

கர்நாடகாவில் உள்ள பழங்குடியின மக்கள் வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 80 வயதிற்கும் மேற்பட்டோர் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் 36 தனி தொகுதி, 15 பழங்குடியினர் தொகுதி, 173 பொதுத்தொகுதிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2018ல் 61 தொகுதிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பதற்றமான தொகுதிகள் 81 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எப்.13-ம் தேதி தொடங்கி ஏப்.20  வரை நடைபெறுகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை ஏப். 21-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்.24 கடைசிநாள் ஆகும். இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும். இதனை தொடர்ந்து மே.13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.