திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய மணமகள்… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

புதுடெல்லி,

நமது நாட்டில் திருமண நிகழ்வு பாரம்பரிய, கலாசார முறைப்படி பல காலங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனினும், சமீப காலங்களாக அதில் சில புதுமையான விசயங்கள் புகுத்தப்படுகின்றன.

திருமணத்தின்போது, முன்பெல்லாம் வாத்திய குழுவினரின் இசை கச்சேரி நடத்தப்படும். பின்னர், திருமண நிகழ்ச்சியில் ஒரு சிலர் சிறந்த நடனங்களை வெளிப்படுத்தினர். இதன்பின்பு, மணமகளே நடனம் ஆடுவது போன்ற விசயங்களும் புதுமையாக காணப்பட்டன.

சில விசேஷ நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு கொண்டாடப்படுவதும் காணப்படுகிறது. இதுபோன்று சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி வைரலாகி வருகிறது. இதில், திருமண ஜோடி மாலை போட்டு அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றனர்.

அவர்கள் அருகே இரண்டடுக்கு கேக் ஒன்று தயாராக வைக்கப்பட்டு உள்ளது. திருமண ஜோடி தங்களது முதுகு பக்கம் ஒட்டியபடி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து காணப்படுகின்றனர்.

அவர்களது கைகளில் ஆளுக்கொரு துப்பாக்கி உள்ளது. எனினும், அது பொம்மை துப்பாக்கியே. அதில் இருந்து தீப்பொறிகள் மட்டுமே வெளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கேமிரா முன்பு தயாராக நின்ற அவர்கள், அதன்பின், துப்பாக்கியை வெடிக்க செய்கின்றனர். மணமகனின் கையில் இருந்த துப்பாக்கியில் தீப்பொறி நன்றாக வந்து கொண்டிருந்தது.

ஆனால், மணமகளின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தீப்பொறி திடீரென அவரது முகத்தில் தாக்கி உள்ளது. இதனால், துப்பாக்கியை கீழே போட்டு விட்டு உடனே திரும்புகிறார்.

அதன்பின்னர் என்னவென்று காட்சிகள் வெளியாகவில்லை. எனினும், மணமகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு இருக்கும் என ஒரு சிலர் தெரிவித்து உள்ளனர். திருமண நிகழ்வில் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளால், அந்த மணமகள் புது வீட்டுக்கு செல்வதற்கு முன்பே அதிர்ச்சியில் பயந்து போன சூழல் ஏற்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.