பரபரப்பான கட்டத்தில் பஞ்சாப் – கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு…!

மொகாலி,

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடின.

இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து பனுகா ராஜபக்சே களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்சே 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் மந்தீப் 2 ரன், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ரன், குர்பாஸ் 22 ரன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ரன், ரிங்கு சிங் 4 ரன், ரஸல் 35 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளது. மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் ஒருவேளை மழை தொடர்ந்து பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்படும்.

அப்போது டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ரன்களே எடுத்துள்ளது. ஒருவேளை ஆட்டம் மறுபடி தொடங்கவில்லை என்றால் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.