“அந்தப் படம் ஓடியிருந்தால் எனக்கான கதாபாத்திரங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும்"- ரோகிணி நேர்காணல்

ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் பல்வேறு துரைற சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், திரைக்கலைஞர் ரோகிணி அவர்கள் பங்கேற்று பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானீர்கள். 50 வருட திரைப்பயணம், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.. நீங்கள் திரைத்துறைக்குள் வந்தது எப்படி?

“அப்பாவுக்கு சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை இருந்தது. சந்தர்ப்பவசத்தால் சென்னை வந்தார். அதற்குக் காரணம்கூட சினிமாதான். அவர் சினிமாவில் நடிப்பறதற்காக நண்பர்கள் மூலமா இயக்குநர்களை சந்திக்கப் போகும்போது, நானும் அவருடன் செல்வேன். அப்படித்தான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவர் என் மூலமா தன் ஆசையை நிறைவேற்றினார். பள்ளிக்கூடத்துக்குப் போனதைவிட சினிமா சார்ந்து பயணித்தது தான் அதிகம். அதுதான் என் பள்ளிக்கூடம், என் பல்கலைக்கழகம், நான் அதிகம் நேசிக்கின்ற இடமும் கூட. 

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா | நடிகை ரோகிணி

பள்ளிப்படிப்பையோ, கல்லூரி படிப்பையோ நடுவில் விட்டுவிட்ட பெண்ணாக அல்லாமல், அதிக தேடல் உடைய பெண்ணாக தான் உங்களைப் பார்த்திருக்கிறேன். இது எப்படி சாத்தியமானது? 

ரோகிணி

“ஏழாம் வகுப்புடன் படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கல்லூரி படிப்பெல்லாம் முடித்து பேசும்போது, எனக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கும். ஆனால், நமக்கிட்டருந்து ஏதாவது பறிச்சிட்டா, அது நமக்கு ரொம்ப வேணும்ணு தோணும். அப்படித்தான் . கிடைத்ததெல்லாம் படிப்பேன்.  யாராவது ஏதாவது மேற்கோள் காட்டினால், அவற்றைத் தேடி வாங்கிப் படிப்பேன். நூலகம் செல்வேன். எழுத்தாளர்கள் மேற்கோள் காட்டியிருக்கும் மற்றொரு எழுத்தாளரின் புத்தகம் என என் வாசிப்பு தொடர்ந்தது.”

இயக்குநர் பாலுமகேந்திரா சாருடன் வேலை பார்த்த அனுபவம் பற்றி? 

“நான் அப்போது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக, எனக்கு எல்லாமே தெரிந்ததுபோல அவரிடம் பேசுவேன். ஆனால் அதையும் காதுகொடுத்து கேட்பார். ஆனால், மேக்கப் போடாமல் தைரியமாக கேமரா முன்பு நிற்க வைத்தது பாலு சார்தான். இல்லைன்னா, மேக்கப் இல்லாமல் நடிக்க வராது என நினைச்சுகிட்ட காலம் அது. அவருக்கிட்ட சினிமாங்கிறது வெறும் ஷூட்டிங்ஙோட முடியறதில்ல, அதுக்கும் முன்னாடி ஒரு பாடல் பதிவா இருந்தாலும் நாம போனோம்னா, ஒரு குழுவா பயணிக்கிறது இன்னும் எளிதாக இருக்கும் என்கிறதையும் கத்துக்கிட்டேன்”

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா | நடிகை ரோகிணி

நீங்கள் டப்பிங் கலைஞராக இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்துள்ளீர்கள். அந்த அனுபவம் பற்றி?

“முதலில் நான் ஏன் டப் பண்ணணும். நானும் ஒரு ஹீரோயின் தானே என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் மணி சார் என்பதால், அவருடன் வேலை பார்க்க இது ஒரு வாய்ப்பு என்று எண்ணினேன். அப்படித்தான் கீதாஞ்சலி, பாம்பே, குரு, இருவர், ராவணன் என வாய்ப்புகள் அமைந்தன. அவருடைய திரைப்படங்கள் எல்லாமே முக்கியமானவை. கதாபாத்திரங்களும் அப்படித்தான். அந்தக் கதாபாத்திரங்களுக்கு குரலாக இருக்கணுங்கிறது ஒரு பெரிய பொறுப்பு. சார் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு ஏற்றார் போல் நான் வேலை பார்த்தேன் என்பதே, அடுத்த முறை அவரது படங்களில் டப்பிங்கிற்காக அழைக்கிறதை வைத்து தான்.”

நீங்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களில், அந்த படம் வெற்றிப்பெற்றிருக்காது. ஆனால் அந்தப் பாத்திரம் வெற்றி பெற்றிருக்கும். அப்படி ஏதேனும் அனுபவம் இருக்கிறதா?

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா | நடிகை ரோகிணி

“அப்படி நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. அதில் ஒரு திரைப்படம் ‘பவுனு பவுனுதான்’. உயிரைக் கொடுத்து நடித்த படம் என்று சொல்வேன். அந்தப் படத்தில் பவுன் கதாபாத்திரத்தில் மனப்பிறழ்வு ஏற்பட்டது போன்று ரயில் நிலையத்தில் கிழிந்த துணியுடன் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்காக பத்து நாட்கள் சாப்பிடாமல்,  இரண்டு நாட்கள் யாருடனும் பேசாமல், இருந்தேன். ஒரு துணை இயக்குநர் என்னை பார்த்து அழுதுவிட்டார்.  நான் மிகவும் எதிர்பார்த்த படம், ஆனா அந்த படம் வெற்றி பெறவில்லை. அந்த படம் ஓடியிருந்தா, தமிழ் சினிமாவில் எனக்கான கதாபாத்திரங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும்.”

இதைப் போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு நடிகை ரோகிணி பதிலளித்திருக்கிறார். அவற்றை வீடியோ வடிவில் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Nayanthara, Samanthaக்கு கிடைக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை – நடிகை ரோகிணி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.