'மூச்சு இருக்கா'.. வலுத்த மிரட்டல் உருட்டல்.. ட்வீட்டை நீக்கிய திமுக அமைச்சர்..!

டெல்லி பாராளுமன்ற புது கட்டிட திறப்பு விழாவின்போது பிரதமர் மோடி செங்கோல் முன்பு தரையில் விழுந்து வணங்கினார். இதற்கு நெட்டிசன்கள் கிண்டலாக மீம்ஸ் பதிவிட்டு வந்த நிலையில் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்து போட்டிருந்த ட்வீட் சர்ச்சையாகியுள்ளது. தரையில் விழுந்து வணங்கும் மோடியின் புகைப்படத்தை பதிவிட்ட மனோ தங்கராஜ் ‘ மூச்சு இருக்கா? மானம் ரோஷம் இருக்கா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனால் ஆவேசமான பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி அமைச்சர் மனோ தங்கராஜை ‘ பொறுக்கி என்று மிக கொச்சையான வார்த்தையை பயன்படுத்தி ‘ ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க’ என்று ட்வீட் போட்டிருந்தார். இந்த நிலையில் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் அமைச்சர் மனோ தங்கராஜை சாடியுள்ளார்.

ட்வீட்டில் ‘ பாரத பிரதமர் சாஷ்டாங்கமாக வணங்குவது தமிழ்நாட்டின் சோழர் மரபு செங்கோல் முன்பும் , தமிழ் ஆதீனத்தின் முன்பும் ! தமிழர் மரபும், தொண்மையும், பெருமையும், பண்பாடும், கலாச்சாரமும் அங்கே உயர்ந்து நிற்கிறது! அமைச்சராக இருக்கும் ஒருவரின் இத்தகைய கீழ்த்தரமான கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அருவறுக்கத்தக்கது’ என விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மோடியை பற்றி எழுதியிருந்த அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கும் பாஜகவினர் டிவிட்டரில் அதை மீண்டும் மீண்டும் பதிவிட்டு அமைச்சரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

நேற்று நாடாளுமன்ற புது கட்டிட திறப்பை ஒட்டி நேற்று டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக காவல் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின் ‘ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது’ என விமர்சித்திருந்தார்.

டெல்லியில் கப்படப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் முக்கிய அம்சமாக தமிழர்களின் கலாச்சார அடையாளமான செங்கோலை பிரதமர் மோடிக்கு ஆதீனம் வழங்கினர். அது நிரந்தர பார்வைக்காக அவைக்குள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.