`வாவ்! `பாயும் புலி' பைக், `சிவாஜி' பல்லக்கு…'- ஏ.வி.எம் அருங்காட்சியகத்தில் ஆச்சரியப்பட்ட ரஜினி!

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு இன்று திடீரென வருகை தந்திருக்கிறார் ரஜினிகாந்த். அவரை ஏவிஎம் சரவணன், குகன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் எனப் பலரும் வரவேற்றுள்ளனர்.

ரஜினியுடன் எஸ்.பி.முத்துராமன், எம்.குகன்

கோடம்பாக்கத்தின் லேண்ட் மார்க் அடையாளங்களுள் ஒன்று வடபழனி ஏரியாவில் அமைந்திருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோ. அதன் ஒரு பகுதியில் ஏவிஎம் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் அதன் திறப்புவிழா நடந்தது. இந்த மியூசியத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.எஸ்.வாசன் (நிறுவனர், ஜெமினி ஸ்டூடியோஸ், ஆனந்த விகடன்) மற்றும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.வி.மெய்யப்பன் போன்ற பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்திய 40க்கும் மேற்பட்ட பழங்கால கிளாசிக் கார்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பைக்குகள் உள்ளன.

ஏ.வி.எம் சரவணனுடன் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘சிவாஜி’ படத்தில் பிரபலமான ‘வாஜி வாஜி’ பாடலில் பயன்படுத்தப்பட்ட பல்லக்குகளும், அதே படத்தில் வரும் ‘அதிரடி’ பாடலில் பயன்படுத்தப்பட்ட 1939 மாடல் எம்ஜிடிபி கார், ‘பாயும் புலி’ படத்தில் பயன்படுத்தப்பட்ட புல்லட் என அரிதான பல பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த அருங்காட்சியத்தை ரஜினி பார்வையிட்டு ரசித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் பேசினேன். ரஜினியை கமெர்ஷியல் கதாநாயகனாக உருவாக்கிய ‘முரட்டுக்காளை’, ‘போக்கிரிராஜா’, ‘வேலைக்காரன்’ ‘தர்மத்தின் தலைவன்’ உட்பட பல படங்களை இயக்கியவர் இவர்.

ரஜினி விசிட்

“ஏவிஎம் மியூசியம் திறப்பு விழாவிற்கு ரஜினி சாரையும் அழைத்திருந்தோம். அப்போது அவர் வெளியூரில் படப்பிடிப்பிலிருந்ததினால் அவரால் கலந்து கொள்ளமுடியாமல் போனது. ‘இன்னொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன்’ என்று ரஜினி சார் சொல்லியிருந்தார். அதனால் இன்று வருகை தந்து வாழ்த்தியிருக்கிறார். அவரை சரவணன் சார், குகன் உட்பட அனைவரும் வரவேற்றோம். மியூசியம் முழுவதையும் ரஜினி சார் சுற்றிப் பார்த்தார். ‘இவ்வளவு கார், எப்படிப் பொக்கிஷமா பாதுகாத்து வச்சிருந்தீங்க. அதிலும் எல்லாமே இப்பவும் ரன்னிங் கண்டிஷன்ல இருக்குது’ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டார் ரஜினி சார். அப்புறம் ‘பாயும் புலி’யில் அவர் ஓட்டிய பைக், ‘சிவாஜி’யில் இடம் பெற்ற பல்லக்கு, கார் எல்லாத்தையும் பார்த்து ரசித்தார். குகன் சாரின் இந்த முயற்சியினை ரொம்பவே பாராட்டினார் ரஜினி சார். சரவணன் சாரையும் நலம் விசாரித்தார்.

தவிர, இப்போது அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்களைத் தவிர, புதிதாக மேலும் படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்து வைக்க உள்ளனர். ஒவ்வொரு மாதமும் மியூசியத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அடுக்கடுக்காக ஆச்சரியப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்” என்கிறார் எஸ்.பி.எம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.