நடிகர் விஜய்யின் `லியோ’ படத்துக்கு பிரமாண்டாக இசைவெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு வந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து, `ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். இதில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை’ என்ற அறிவிப்பு வெளியானது. இருப்பினும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகப் பரவலாகப் பேச்சுக்கள் அடிபட்டன. அதன் பின்னர், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கவே, லியோ படத்துக்கு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தயாரிப்பாளர் தரப்பு கோரிக்கை விடுத்தது.

அதைத் தொடர்ந்து, அக்டோபர் 19-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை, ஆறு நாள்களுக்கு தினசரி ஒரு சிறப்புக்காட்சி என ஒருநாளைக்கே மொத்தமாக ஐந்து காட்சிகள்தான் திரையிடப்பட வேண்டும் என அரசு அனுமதியளித்தது. இருப்பினும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் சென்றது படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதற்கிடையில், நடிகர் விஜய்யைக் கண்டு தி.மு.க அஞ்சுவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, சீமான் ஆகியோர் கூறியிருந்தனர்.
இவ்வாறான சூழலில், லியோ நான்கு மணி சிறப்புக் காட்சி குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க ஆட்சியில் விஜய்யின் `தலைவா’ படத்துக்கு வந்த பிரச்னையை மறைமுகமாகக் குறிப்பிட்டு, `அன்றைக்கு அ.தி.மு.க என்ன பாடுபடுத்தியது என்று தெரியும்!’ எனக் கூறியிருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது லியோ விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, “திரைப்படங்களுக்கு ஒரு நாளைக்கு சிறப்புக்காட்சி உட்பட ஐந்து காட்சிகள். அதற்கு தமிழக அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. 4 மணிக்கு சிறப்புக்காட்சியைக் கேட்டார்கள். ஆனால், காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை திரையிட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 4 மணிக்கு திரையிடட்டும் என்று நீதிமன்றம் கூறினால், அவர்கள் திரையிடட்டும்.
என்றைக்கும் திரையுலகத்தோடு எந்தவித விரோதத்தையும் சம்பாதித்துக்கொள்ள முதல்வர் விரும்பமாட்டார். அ.தி.மு.க அன்று என்ன பாடுபடுத்தியது என்று நன்றாகவே தெரியும். கடம்பூர் ராஜூவைப் பொறுத்தவரைக்கும் போகிற போக்கில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை” என்று கூறினார்.

இதேசமயத்தில், அ.தி.முக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் லியோ விவகாரம் குறித்துப் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சியில் திரைத்துறையை சுதந்திரமாகச் செயல்படவிட்டோம். அன்றைக்கு விஜய் படத்தை ரிலீஸ் செய்யவிட்டோம். ஆனால், இன்றைக்கு திரைப்படங்கள் ரெட் ஜெயன்ட்டுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லையென்றால், பிரச்னைகள், தொல்லைகள் வரும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் 20, 30 படங்களைத்தான் வெளியிட்டனர். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை ரெட் ஜெயன்ட் வெளியிட்டது.
அவர்கள் கேட்கிற அடிமாட்டு விலைக்குப் படங்களைக் கொடுத்தால்தான் எல்லா விதமான அனுமதியும் கிடைக்கும். அன்றைக்கு பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்று கருணாநிதிக்கு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் நடிகர் அஜித், `நான் அழைத்துவரப்படவில்லை, இழுத்துவரப்பட்டேன்’ என்று கூறினார். இன்றைக்கு தி.மு.க, திரைப்படக் கலைஞர்களை முழுமையாக அச்சுறுத்தி வைத்திருக்கிறது” என்று கூறினார்.

இதுவொருபுறமிருக்க, “ஒன்பது மணிக்குத்தான் காட்சி தொடங்க வேண்டும் என்ற விதியை மீற முடியாது” என சென்னை உயர் நீதிமன்றம், அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.