காசாவில் இரண்டாவது நாளாக இஸ்ரேல் தரைவழி தாக்குதல்| Second day of Israeli ground attack on Gaza

டெய்ர் அல் -பாலா,காசாவில் இரண்டாவது கட்டமாக தரைவழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் படைகள், அங்கு பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை அழித்தன.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்த, 7 முதல் மோதல் நடக்கிறது. இதில், இரு தரப்பிலிருந்தும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 7,000ஐ தாண்டியுள்ளதாக, காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில், 1,400 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது.

அதன்படி, காசாவின் பல பகுதிகளில், இரண்டாவது நாளாக நேற்றும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்த இஸ்ரேல், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து தாக்கியது. 

காசாவின் புறநகர் பகுதியான ஷிஜாயாவில், பயங்கரவாதிகளின் முகாம்களை விமானம் மற்றும் பீரங்கி குண்டுவீசி, இஸ்ரேல் தாக்கியது.

”போரின் அடுத்த கட்டத்தை தயார் செய்வதன் ஒரு பகுதியாகவே, இந்த வரையறுக்கப்பட்ட ஊடுருவலை செய்து வருகிறோம்,” என, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேல் எல்லையில் உள்ள தபா நகரில் உள்ள மருத்துவக் கட்டடம் மீது ராக்கெட் வீழுந்ததில், ஆறு பேர் லேசான காயம் அடைந்ததாக, எகிப்து அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தியதால், மக்களிடையே பீதி நிலவியது.

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் கூறுகையில், ”காசா மீது முழுவீச்சில் தரைவழித் தாக்குதல் நடத்த எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் அது, எளிதான காரியம் அல்ல.

”காசாவில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தப்படும் சுரங்கப்பாதைகளின் கட்டமைப்பை முதலில் அழிப்பதை நோக்கமாக வைத்துள்ளோம்,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.