திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கலைவாணனின் அண்ணன் மகன் கலைவேந்தன் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கொரடாச்சேரி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் அண்ணன் மறைந்த பூண்டி கலைச்செல்வத்தின் மகன், கலைவேந்தன், வயது 24. இவர் தி.மு.க-வில் கொரடாச்சேரி பேரூர் கழகச் செயலாளராக இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு படுகொலைசெய்யப்பட்ட பூண்டி கலைச்செல்வத்தின் 16-ம் ஆண்டு நினைவுநாள், நாளை நவம்பர் 17-ம் தேதி வரவிருக்கும் நிலையில், கொரடாச்சேரி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்காக கலைவேந்தனின் ஆதரவாளர்கள் ஃபிளக்ஸ் வைத்திருக்கின்றனர்.

கடந்த 12-ம் தேதி தீபாவளி இரவு 7:30 மணியளவில் கடைவீதியில் கணேஷ் என்பவர், கலைச்செல்வம் நினைவுநாளுக்காக வைத்திருந்த ஃப்ளக்ஸ் போர்டில் கைவைத்தபடி நின்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த கலைவேந்தனின் நண்பர் நவீன், `என் தலைவன் போட்டோ மேல் ஏன் கைவைத்துக் கொண்டு நிற்கிறாய்?’ எனக் கேட்டிருக்கிறார். ‘சும்மாதான் நிற்கிறேன்’ என கணேஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை நவீன் அடித்திருக்கிறார்.
அங்கிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவரான செந்தில்குமார் என்பவர், ‘சும்மா நின்று கொண்டிருந்த சின்னப் பையனை ஏன் அடிக்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கலைவேந்தனின் கார் டிரைவர் சூர்யபாரதியும், நவீனுடன் சேர்ந்து கொண்டு செந்தில்குமாரை அடித்திருக்கிறார். இதைப் பார்த்தவர்கள், பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தகவல் சொல்லியிருக்கின்றனர்.
உடனே அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சம்பவ இடத்துக்கு வந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து உடனே கலைவேந்தனுக்கு போன் செய்த நவீன், அவர்களின் சாதி குறித்துப் பேசி விட்டு, `எல்லோரும் நமக்கு எதிராகக் கூடி நிற்கிறாங்க, உடனே கிளம்பி வா’ என்றிருக்கிறார். இதையடுத்து கலைவேந்தனும், மாவட்டச் செயலாளர் கலைவாணனின் மகன் கலைஅமுதனும் ஐந்துக்கும் மேற்பட்டோருடன் காரில் வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து இறங்கியிருக்கின்றனர்.
காரிலிருந்து இறங்கிய உடனே கலைவேந்தன், செந்தில்குமாரை சாதியைச் சொல்லி தரக்குறைவாகப் பேசி அடித்ததாகச் சொல்லப்படுகிறது. `சும்மா நின்று கொண்டிருந்த என்னை, உங்க ஆளுங்க அடிக்குறாங்க. என்னை விட்டுடுங்க’ என கெஞ்சிய செந்தில்குமாரிடம், `என்னையே எதிர்த்துப் பேசுறியா’ என ஆக்ரோஷமாக கேட்டதுடன், கலைவேந்தன் உள்ளிட்டோர் செந்தில்குமார், கணேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் கொரடாச்சேரி போலீஸாருக்குச் செல்ல, இன்ஸ்பெக்டர் சசிகலா சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார்.

கலைவேந்தன் தரப்பினர் இன்ஸ்பெக்டரையும் தள்ளிவிட்டனர். இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த செந்தில்குமார், கணேஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த போலீஸ், கலைவேந்தனை மட்டும் கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல், திருவாரூர் மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். “தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் கலைவாணனின் அண்ணன் மறைந்த கலைச்செல்வன், தி.மு.கவில் அதிகாரமிக்கவராக இருந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த கோ.வி.சம்பத் அ.தி.மு.க யூனியன் சேர்மனாக இருந்தார். அரசு ஒப்பந்தப் பணிகளுக்கான பில் கொடுப்பதில் கலைச்செல்வம் தரப்புக்கும், சம்பத் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், சம்பத் கொலைசெய்யப்பட்டார். சம்பத்தின் தம்பி கோ.வி.சந்துரு தற்போது பா.ஜ.க-வில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். சம்பத் இறந்த பிறகு, அவருடைய அக்கா மகன் செந்தில்குமார், கலைச்செல்வத்தைப் பழிதீர்க்கக் காத்திருந்தார். அதற்காக, போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட மறைந்த பிரபல ரெளடி மணல்மேடு சங்கருடன் சேர்ந்தார். சங்கரின் கூட்டாளிகளை அழைப்பிதழ் கொடுப்பதுபோல் அனுப்பி, கலைச்செல்வம் வீட்டுக்கே சென்று வெடிக்குண்டு வீசி, கலைச்செல்வத்தைக் கொலைசெய்தனர்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் டெல்டாவையே அதிரவைத்தது. அதன் பிறகு, கலைச்செல்வத்தின் தம்பி கலைவாணன் தி.மு.க-வில் திருவாரூர் மாவட்டச் செயலாளராக ஆனார். அதன் பிறகும், சந்துரு குடும்பத்துக்கும், கலைச்செல்வம் குடும்பத்துக்கும் இடையே பகை நீடித்தது. ஆனாலும், பெரிய மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே கலைவாணன் எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.
இந்த நிலையில், கலைச்செல்வத்தின் மகன் கலைவேந்தன் கோஷ்டிகள் சூழ வலம் வந்து, பலச் சம்வங்களில் ஈடுபடத் தொடங்கினார். ஆளுங்கட்சியில் பொறுப்பில் இருப்பதால், அவர்மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கலைச்செல்வத்துக்காக வைக்கப்பட்டிருந்த நினைவுநாள் ஃப்ளக்ஸ் அருகே, சந்துருவின் உறவினரான கணேஷ் நின்றது, தற்போது மோதலுக்குக் காரணமாகியிருக்கிறது.
ஆளுங்கட்சிக் கொடி கட்டிய காரில் வந்து கலைவேந்தன் தரப்பினர் கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம், திருவாரூரையே அதிரவைத்திருக்கிறது. உடனே கலைவேந்தனை முதல் குற்றவாளியாகச் சேர்த்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரை மட்டும் கைதுசெய்தனர்.

இந்த மோதலைக் காரணமாக வைத்து, மணல்மேடு சங்கரின் கூட்டாளிகள் கலைவேந்தனுக்கு ஸ்கெட்ச் போட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், கலைவாணன் கொடுத்த அழுத்தத்தில் அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில், போலீஸ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறது. அத்துடன் அவரை சிறையில் அடைக்காமல் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கலைவாணன் தன் மகன் கலைஅமுதனைக் கைதுசெய்யவிடாமல், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. சம்பவ இடத்துக்கு கலைஅமுதனும் வந்திருந்தார். ஆனால், அவர் பெயர் எஃப்.ஐ.ஆ-ரில் இல்லை” என்றனர் விரிவாக.
இந்த விவகாரம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இரு தரப்பும் மோதிக் கொண்டிருக்கிறது. இது சாதிய மோதலாக மாறும் சூழல் நிலவுவதால், உடனடியாக போலீஸ் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
“கலைவாணன் எந்தப் பாகுபாடில்லாமல் மகன்களை வழி நடத்துகிறார். அது அவரை அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத் தெரியும். கலைவாணனுக்கு வேண்டாதவர்கள் இதனை திட்டமிட்டுக் கிளப்பிவிடுகின்றனர். போலீஸார் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும், இல்லை என்றால் திருவாரூர் கலவர களமாக மாறும்” என்கிறார்கள் தி.மு.க தரப்பினர்.
இது தொடர்பாக பேசுவதற்கு கலைவாணனைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில், அதை உரியப் பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்!