வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க, சுமார் 350 தொகுதிகளில் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்றெல்லாம் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பேசினர். ஆனால் இப்போது, அதற்கான அறிகுறியே தெரியவில்லை.

‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ‘இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறேன்’ என்று சொல்லும் முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மேற்கு வங்கத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம்’ என்கிறார்.
அதுவும், ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு முந்தைய நாள் அப்படியான அறிவிப்பை மம்தா பானர்ஜி வெளியிடுகிறார். மம்தா பானர்ஜியின் இந்த அணுகுமுறையை, இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் அதிர்ச்சியோடு பார்த்தன.
மேற்கு வங்கத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று சொன்ன மம்தா பானர்ஜி, பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளைத் தருவதற்கு முன்வந்தார். உடனே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் கொந்தளித்தனர்.
இரண்டு தொகுதிகள் என்று அவர் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதே நேரம், மேற்கு வங்கத்தில் ஆறு சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. எனவே, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பது மாநில காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடு.

ஆனால், மம்தா பானர்ஜி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றதால், இப்போது இரண்டு தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்கிறார் அவர். இதனால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியது.
இயல்பாகவே அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உறவு கிடையாது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும்போல, மேற்கு வங்கத்தில் அந்த இரு கட்சிகளும் அன்றாடம் மோதிக்கொள்ளும் அரசியல் சூழல் இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று சொன்னதால், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி.

அது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடைசியில், காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடையாது என்ற நிலைக்கு மம்தா பானர்ஜி வந்துவிட்டார். ‘மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸால் மட்டுமே பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியும். எனவே, எல்லா தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம்’ என்கிறார்.
தற்போது, ‘மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட கிடையாது. இந்த நிலையில், அவர்களுக்கு மால்டாவில் இரண்டு தொகுதிகளைத் தருவதற்கு முன்வந்தோம். அதை அவர்கள் ஏற்கவில்லை. எனவே, அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடையாது’ என்கிறார் மம்தா.

மால்டா, காங்கிரஸுக்கு செல்வாக்கான தொகுதி. தனியாக நின்றாலே அவர்களால் அங்கு வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. அப்படியிருக்கும்போது, தொகுதிப்பங்கீட்டில் அதைத் தருவதாக மம்தா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
இந்த நிலையில், மால்டாவில் நாங்களே போட்டியிடுவோம் என்று அறிவித்திருக்கிறார் மம்தா. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில், ‘திரிணாமுல் காங்கிரஸுடன் சுமூகமாக தொகுதிப்பங்கீடு செய்துகொள்வதற்கான முயற்சி நடக்கிறது’ என்கிறது காங்கிரஸ் மேலிடம்.

‘கூட்டணியில் இருக்கும்போது இரு தரப்பும் ஒரே குரலை ஒலிக்க வேண்டும். ஒரு தரப்பால் எடுக்கப்படும் முடிவை ஏற்க முடியாது’ என்கிறார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர் மம்தா. இவர்களுக்கு இடையே தொகுதி பங்கீடு இருக்குமா… மம்தாவின் பிடிவாதத்துக்கு காங்கிரஸ் அடிபணியுமா? அல்லது மம்தா சற்று கீழே இறங்கிவருவாரா? தனி தனியே போட்டியிட்டு தேர்தல் பின் பார்க்கலாம் எனும் முடிவுக்கு வருவார்களா? எனும் கேள்விகள் வரிசை கட்டுகின்றன.
அரசியல் ஆட்டத்தில் எதுவும் நடக்கும் என்று சொல்ல தனியே உதாரணங்கள் தேவையில்லை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY